மனித மாமிசம்! -கூடுவாஞ்சேரி பயங்கரம்!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து டெல்லி நோக்கி சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலின் முன்பதிவில்லா பெட்டியிலிருந்து ஆகஸ்ட் 5ஆம் தேதி, மோசமான துர்நாற்றம் வீசியதால் பயணிகள் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில், ஆக்ரா ரயில் நிலையத் தில் ரயில்வே போலீசார் சோதனை செய்தபோது சிவப்பு நிற ட்ராலி சூட்கேஸ் தனியேயிருக்க, அதிலிருந்து துர்நாற்றம் வீசியதால் அதை ரயில்வே போலீசார் திறந்து பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்தனர். அதில் பிளாஸ்டிக் கவர்களில் மனித மாமிசத் துண்டுகள், எலும்புகள், குடல், ஈரல் போன்றவை இருக்க, உடனடியாக விசாரணையை துவக்கினர். அந்த பிளாஸ்டிக் கவரில் சரவணா ஸ்டோர்ஸ் என்று தமிழில் எழுதப்பட்டிருந்தது. மற்றொரு பிளாஸ்டிக் கவரிலும் தமிழில் எழுதப்பட்டிருக்க, தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் தான் அந்த ட்ராலி சூட்கேஸை வைத்திருக்கக் கூடுமென்று தெரியவந்தது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய போலீசாருடன் இணைந்து சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வுசெய்த ஆக்ரா ரயில்வே போலீசார், கண்ணாடி போட்ட ஓர் இளம்பெண்ணும், அவருடன் வந்த ஆணும் அந்த சிவப்பு நிற ட்ராலி சூட்கேஸை எடுத்து வருவதை கண்டறிந்தனர். தொடர்ச்சியாக அடுத்தடுத்த சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வுசெய்ததில், அந்த நபர்கள் கூடுவாஞ்சேரியிலிருந்து வருவது தெரியவந்தது. உடனே கூடுவாஞ்சேரி காவல் நிலையத்திற்கு வந்த ஆக்ரா ரயில்வே போலீசார், தொடர்ந்து ஆய்வுசெய்ததில், ஒரு ஆட்டோவில் ஏறிச்செல்வது பதிவாகியிருந்தது. அவர்களின் படத்தைக் காட்டி விசாரித்தபோதும் யாருக்கும் தெரியவில்லை. இப்படியாக 15 நாட்கள் கடந்த நிலையில், ஆக்ராவில் கண்டெடுக்கப்பட்ட மனித மாமிச வழக்கில், 18ஆம் தேதி தான் ஆக்ரா ரயில்வே போலீசார் ஜீரோ எஃப்.ஐ.ஆர். பதிவு செய்து, சென்னை சென்ட்ரல் ரயில்வே போலீசாருக்கு டிரான்ஸ்பர் செய்தனர். அதேபோல, கைப்பற்றிய மனித உடல் பாகங்களை ஆய்வகத்துக்கு அனுப்பிவிட்டு, மிச்சத்தை 72 மணி நேரத்தில் தகனம் செய்தனர். வழக்கும் முட்டுச்சந்தில் நிற்கும் நிலை!
அடுத்ததாக, கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி. சாலையையொட்டிய மசூதியருகிலுள்ள ஒரு வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக போலீசாருக்கு தகவல் வர, கூடுவாஞ் சேரி காவல் ஆய்வாளர் கோவிந்தசாமி அந்த வீட்டின் கதவை உடைத்துப் பார்த்தபோது, பிரியாணி செய்யும் டபராவினுள் மனித மாமிசம், துண்டு துண்டாக வெட்டப்பட்டு, அதன்மீது மசாலா மற்றும் திரவம் போன்று இருந்தது. அந்த டபராவை சிவப்பு நிறத்துணியால் சுற்றிக்கட்டியிருந் தனர். கைப்பற்றப்பட்ட மனித மாமிசத்தை உடற் கூராய்வுக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். ஆய்வில் வந்த தகவல்படி, ஆக்ராவில் ரயிலில் கிடைத்த மனித உடல் உறுப்புகளும், இப்போது கைப்பற்றப்பட்ட மாமிசமும் ஒரே நபருடையது என்று விசாரணையில் தெரியவர, முடங்கிப்போன வழக்கை கூடுவாஞ்சேரி போலீசார் தட்டியெடுத்து விசாரணையை துவங்கினர்.
அந்த வீட்டு உரிமையாளரை விசாரித்ததில், 38 வயதுள்ள ஹைதுன் நிஷா என்பவர் சில மாதங்களுக்கு முன்பு வாடகைக்கு குடியிருந்ததும், அவரோடு கடந்த ஜூலை மாதம், 25 வயது மதிக்கத்தக்க ஓர் ஆணும், இளம்பெண்ணும் சேர்ந்து தங்கியதாகவும், தன்னுடைய தம்பி, தம்பி மனைவி என்று ஹைதுன் நிஷா சொன்னதாகவும் கூறினர். கடந்த ஆகஸ்ட் நான்காம் தேதி அந்த தம்பதிகள் மட்டும் வீட்டை பூட்டிக்கொண்டு சென்றபோது, வீட்டின் உரிமையாளர் கேட்டதற்கு ஹைதுன் நிஷா உறவினர் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாததால் இரண்டு நாட்கள் முன்பே சென்றுவிட்டதாகவும், நாங்களும் செல்கிறோம், வந்து வாடகை பாக்கியை செலுத்துகிறோம் என்று கூறிவிட்டு சென்றதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில், ஹைதுன் நிஷாவின் மகனான யூசுப் கானை விசாரித்ததில், கொல்லப்பட்டவர் குறித்த முக்கிய முடிச்சு அவிழ்ந்தது. அம்மா ஹைதுன் நிஷா, தந்தை ஜகுர்கான் இருவரும் ஒடிசாவை சேர்ந்தவர்கள் என்றும், ஜகுர்கான் பத்தாண்டுகளுக்கு முன்பு பிரிந்து வேறு திருமணம் செய்துகொண்ட நிலையில், மகனுடன் ஹைதுன் நிஷா மாடம்பாக்கத்தில் தங்கியிருந்துள்ளார். தாம்பரம் மெப்ஸில் பணியாற்றும்போது அறிமுகமான அசாமை சேர்ந்த மாணிக் உத்தன் லஸ்கரை அவர் காதலிக்கத் தொடங்க, அவரை திருமணம் செய்ய விரும்புவதை மகன் யூசுப் கான் ஏற்கமறுத்து, தாயிடமிருந்து பிரிந்து பெருங்களத் தூரில் தனியாக வீடெடுத்து தங்கியுள்ளார்.
தலைமறைவான மாணிக் உத்தன் லஸ்கர், அவரது மனைவி பகபதி மாஜியின் செல்போனை போலீசார் ட்ராக் செய்ததில், அசாமிலிருப்பதை கண்டறிந்த தனிப்படை போலீசார், அசாமுக்கு விரைந்தனர். அசாமில் மாணிக்கின் வீட்டிலும், ஒடிசாவில் பசுபதி மாஜியின் வீட்டிலும் தேடியபோது இருவருமே தலைமறைவானது போலீசாருக்கு சிக்கலை ஏற்படுத்தியது. 5 நாட்கள் தீவிர தேடலில், மணிப்பூரில் ஜிரிபாம் மாவட்டம் காஷ்ம்பூர் பகுதியில் இருப்பதை கண்டறிந்தனர். குற்றவாளி மாணிக்கின் உறவினர் ஒருவரின் உதவி யுடன், மாவோயிஸ்ட் மிகுந்துள்ள மணிப்பூர் பகுதிக்கு துணிச்சலோடு தமிழ்நாடு தனிப்படை போலீசார் சென்றனர்.
அங்குள்ள லோக்கல் போலீசாரே மாவோயிஸ்ட் பகுதிக்குள் நுழைய அச்சத்தோடு மறுக்க, தாம்பரம் மாநகர ஆணையர் பிரேமான் சங்காவின் மூலம் பள்ளிக்கரணை துணை ஆணையர் கார்த்திகேயன் ஐ.பி.எஸ். மூலம் அவரின் நண்பரான ஜிரிபாம் மாவட்ட போலீஸ் எஸ்.பி.யான பாந்தே ஐ.பி.எஸ். உதவியுடன் தமிழக தனிப்படை போலீசார் காஷ்ம்பூர் கிராமத்திற்கு சென்று விசாரித்து, மாணிக் ஒளிந்திருக்கும் அவனின் தாத்தா வீட்டை அடையாளம் கண்டனர். அந்த வீட்டில் சென்று விசாரிக்கும் போது அதுபோல் யாருமில்லையென்று மறுத்தனர். ஆனால் அங்கே சப்பாத்தி முட்டை குருமா சாப்பிட்டிருப்பது தெரியவர, சற்றுமுன்னர் தப்பியோடியது தெரியவந்தது. அங்குள்ள மாணிக்கின் உறவினர்களிடம், கூடுவாஞ்சேரி கொலை குறித்து எடுத்துக்கூறி விசாரித்ததில், மாவோயிஸ்ட் கட்டுப்பாட்டுப் பகுதியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி ஒரு இன்பார்மர் மூலமாகக் கிடைத்த தகவலில், அவன் தனது மனைவியை ஒரியாவுக்கு தப்பிக்கவைக்க ரயில் டிக்கெட் எடுக்க வருவது தெரியவர, மறைந்திருந்த போலீசார் அவர்களை கொத்தாகத் தூக்கினர்! மொழி தெரியாமல், வழி தெரியாமல், காடு, மலைகளைத் தாண்டி, மாவோயிஸ்டுகள் ஆபத்துக்கு நடுவே குற்றவாளி யை கைது செய்து தமிழக போலீசார் சாதித்தனர்! குற்றவாளிகளை ஜிரிபாம் மாவட்ட நீதிபதியிடம் சரண்டர் செய்து விசாரணைக்காக 6 நாட்கள் காவலில் எடுத்தனர். பின்னர் விமானம் மூலம் சென்னை கொண்டுவந்தனர்.
அவர்களிடம் விசாரித்தபோது, அசாம் மாநிலத்தை சேர்ந்த மாணிக் உத்தன் லஸ்கர், மதுராந்தகத்திலுள்ள பி.ஜி.எல். ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை செய்தபோது, ஒரிசாவை சேர்ந்த பகவதி மாஜியுடன் பழக்கம் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டதாகவும், அதே நிறுவனத்தில் வேலை செய்த ஹைதுன் நிஷாவுட னான நட்பு திருமணம் தாண்டிய தவறான உறவாக மாறியதோடு, நிஷாவிடம் பண உதவிகளும் பெற்றதாகத் தெரிவித்தான். ஒருகட்டத்தில் மூவரும் சேர்ந்துவாழ ஒப்புக்கொள்ள, நிஷாவின் மகன் எதிர்ப்பால் கூடுவாஞ்சேரியில் தனிவீட்டில் வசித்துள்ளனர். இந்நிலையில் நிஷா கர்ப்பமாக, அவரை திருமணம் செய்ய வற்புறுத்தியுள்ளார். அதோடு பாலியல் ரீதியாகவும் மிகவும் டார்ச்சர் செய்ய, ஒருகட்டத்தில் நிஷாவை கொலை செய்ய முடிவெடுத்தனர். ஆகஸ்ட் 2ஆம் தேதி கோவில் திருவிழாவுக்கு ஸ்பீக்கரில் சத்தமாக பாட்டு கேட்கும்போது உணவில் விஷம் கலந்துகொடுக்க, அதை சாப்பிட்டு நிஷா மயக்கமானார். உடனே பாத்ரூமுக்கு இழுத்துச்சென்று, கழுத்தை அறுத்துக்கொன்று, உடலை துண்டுதுண்டாக பாகங்களாக்கி, அடையாளந்தெரியாதிருக்க, மிகக்கொடூரமாக தோலை உரித்து, வெட்டிய பாகங்களை பிரியாணி டபராவில் போட்டு, மண்டையை இரும்பால் துண்டு துண்டாக சிதைத்து, உடல் பாகங்களை வெட்டி, குடல், இதயம், ஈரல் போன்ற பகுதியை தனியாக ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு வைத்து, கர்ப்பப் பையிலிருந்த அடையாளம் தெரியாத சிசுவையும் கவரில் போட்டு, சிவப்பு நிற சூட்கேஸில் போட்டு, அதைத்தான் சென்ட்ரல் ரயில் நிலையத்திலுள்ள தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் வைத்துவிட்டு திரும்பினர்.
பிரியாணி டபராவை, யூட்யூப் வீடியோ பார்த்து, வினிகர் மற்றும் 15 கிலோ உப்பு வாங்கி வந்து மாமிசம் உடனடியாக உருத்தெரியாமல் நீர்த்துப்போக பிரியாணி டபராவில் கொட்டி, அதன்மீது மைதா மாவை பிசைந்து, சிவப்பு சேலையால் சுற்றிக்கட்டினர். அங்கிருந்த நகை, பணத்தை எடுத்துக்கொண்டு, குரோம்பேட்டையி லுள்ள பிரபல நகைக்கடையில் மனைவிக்கு ஒரு மோதிரம் வாங்கிக்கொண்டு, மற்றவற்றை விற்றுவிட்டு வந்தவர்கள், 5ஆம் தேதி ஆக்ராவில் கைப்பற்றப்பட்ட தகவலை டிவியில் பார்த்ததும் உஷாராகி, விமானம் மூலம் அசாமுக்கு சென்று பதுங்கிய நிலையில் கைதாகியுள்ளனர்!
தமிழக தனிப்படை போலீசாரின் அயராத துணிச்சலான தேடலால் தற்போது கொடூர குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)