சாலையில் நிறுத்தப்படும் வாகனங்கள் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்
ஊத்துக்கோட்டை, செப். 15– சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களால், விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள் பயணித்து

சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களால், விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள் பயணித்து வருகின்றனர்.
சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது ஊத்துக்கோட்டை பேரூராட்சி. இங்கு, குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றம், தாலுகா அலுவலகம், டி.எஸ்.பி., அலுவலகம், அரசு மற்றும் தனியார் மேனிலைப் பள்ளிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் உள்ளன.
சுற்றியுள்ள கிராம மக்கள், தங்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கு, ஊத்துக்கோட்டைக்கு சென்று திரும்புகின்றனர். மேலும், சென்னையில் இருந்து ஆந்திராவின், பிச்சாட்டூர், புத்துார், நகரி, திருப்பதி, கடப்பா, கர்நுால், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள், ஊத்துக்கோட்டை பஜார் வழியே செல்கின்றன.
இங்குள்ள பஜார் பகுதியில், ஏற்கனவே சாலையை ஆக்கிரமித்து வியாபாரம் செய்து வருவதால், அரை கி.மீ., துாரத்தை கடக்க, அரை மணி நேரத்திற்கும் மேல் ஆகிறது.
இந்நிலையில், பஜார் பகுதியில் உள்ள பேருந்து நிலையத்திற்கு செல்லும், பெரும்பாலான அரசு மற்றும் தனியார் பேருந்துகள், சாலையிலேயே நிறுத்தி பயணியரை ஏற்றி, இறக்கி செல்கின்றன.
இதே நிலை, திருவள்ளூர், நாகலாபுரம் சாலைகளிலும் உள்ளது. இதனால், பின்னால் வரும் வாகனங்கள், முன்னேறி செல்ல முடியாத நிலை உள்ளது. பாதசாரிகளும் அச்சத்துடன் நடந்து செல்ல வேண்டி உள்ளது. பேருந்து நிறுத்தத்திற்கு எதிரில், குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றம் செயல்படுகிறது.
அப்பகுதியில், வாகனங்களை சாலையில் நிறுத்துவதால், பொதுமக்கள் பெருமளவு பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, பள்ளி நாட்களில் மாணவ – மாணவியர், அப்பகுதியை அச்சத்துடன் கடந்து செல்கின்றனர்.
எனவே, மாவட்ட எஸ்.பி., ஆய்வு செய்து, ஊத்துக்கோட்டை பஜார், நாகலாபுரம், திருவள்ளூர் சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையில் நிறுத்தப்படும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.