கல்லுாரி பஸ் மோதியதில் 4 மாணவியர் உயிரிழப்பு

எலச்சிபாளையம்: கல்லுாரி பஸ் மோதிய விபத்தில், ஒரே மொபட் டில் சென்ற கலைச்செல்வி, 20, உட்பட நான்கு மாணவியர் உயிரிழந்தனர்.
நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம், சக்ராம்பாளையம் புதுாரை சேர்ந்த சேகர் மகள் கலைச்செல்வி. தனியார் கல்லுாரி மாணவி.
நேற்று மதியம், கல்லுாரி முடிந்து, வீட்டுக்கு வந்த கலைச்செல்வி, தன் தங்கைகளான பிளஸ் 1 மாணவி நிவேதா, 16, ஏழாம் வகுப்பு படிக்கும் அனுஸ்ரீ, 12, உறவினரான ரமேஷ் பாபு மகள் அபிநயா, 11, ஆகியோரை, பள்ளியில் இருந்து, 'டி.வி.எஸ்., எக்ஸல்' மொபட்டில், வீட்டிற்கு அழைத்து வந்து கொண்டிருந்தார்.
ராசிபுரம் -- திருச்செங்கோடு பிரதான சாலையில், சக்ராம்பாளையம் பகுதியில், மாலை, 5:00 மணியளவில் சாலையை கடக்க முயன்றபோது, கலைச்செல்வியின் மொபட் மீது, ராசிபுரத்தில் இருந்து திருச்செங்கோடு நோக்கி, அதிவேகமாக வந்த தனியார் கல்லுாரி பஸ் மோதியது.
இதில், நான்கு மாணவி யரும் துாக்கி வீசப்பட்டதில், கலைச்செல்வி , அபிநயா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிருக்கு போராடிய நிவேதா, அனுஸ்ரீ, திருச் செங்கோடு அரசு மருத்துவ மனைக்கு செல் லும் வழியில் உயிரிழந்தனர் .
ராசிபுரத்தைச் சேர்ந்த டிரைவர் பிரவீன், 22, பஸ்சை நிறுத்தி, ஓட்டம் பிடித்தார். எலச்சிபாளையம் போலீசார், வழக்கு பதிந்து, அவரை தேடி வருகின்றனர்.
கல்லுாரி பஸ் மோதியதில், நான்கு மாணவியர் உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.