Arts, culture, entertainment and media
பாப்பையா... ஒரு சகாப்தம்!

டி.வி சீரியல் இயக்குநரும், பாப்பையாவின் மாணவருமான ஜெரால்டு கூறுகையில், ‘`வகுப்பறைக்குள் இருக்கும் சாலமன் பாப்பையாவின் முகம் நீங்க மேடையில பார்க்கிற முகம் கிடையாது. சீரியஸான பேராசிரியர்.
ஒருகாலத்தில் பட்டிமன்றம் என்றாலே அது அறிவாளிகளுக்கான மேடை என்று இருந்தது. அந்த மேடைக்குப் பாமரனையும் அழைத்து வந்து, தமிழைக் கேட்கவைத்தவர் சாலமன் பாப்பையா. அவரது பேச்சில் நகைச்சுவை இருந்தது... நையாண்டி இருந்தது... இலக்கியம் இருந்தது... அதையெல்லாம் தாண்டி, மனிதர்களை மனிதர்களாகப் பார்க்கச் சொல்லும் ஒரு மெல்லிய அன்பும் இருந்தது.
90 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த அன்பின் குரல் ஓய்ந்திருக்கிறது. அவர் கடைசியாகப் பேசிய பட்டிமன்ற உரை ஒளிபரப்பாகும் நாளில், அவருக்கு அஞ்சலிக் கட்டுரை எழுத வைத்துவிட்டது காலம். ஆனால், அவர் பேசிய தமிழ் ஓயவில்லை. அவர் வளர்த்த பேச்சாளர்களின் குரலிலும், அவரிடம் பயின்ற மாணவர்களின் நினைவுகளிலும், அவர் ரசிக்கவைத்த லட்சக்கணக்கான தமிழ் நெஞ்சங்களிலும் பாப்பையா தொடர்ந்து பேசிக்கொண்டேயிருப்பார்.
பிறப்பால் கிறிஸ்தவராக இருந்தும், மதுரை மீனாட்சியின் மீது அளப்பரிய பக்திகொண்ட பாப்பையா, தான் இறந்த பிறகு தன் உடலை தகனம் செய்ய வேண்டும் என விருப்பம் தெரிவித்திருந்ததால், அரசு மரியாதை வழங்கப்பட்டு, அவரது விருப்பப்படியே நடந்தது இறுதிச்சடங்கு.
பதின்ம வயதில் சாலமன் பாப்பையாவின் பேச்சில் வியந்து, பிறகு அவருடைய அணியில் ஒருவராகப் பேசியவரும், பிற்பாடு பாப்பையாவிடமிருந்து விலகி, தனி அணியையே உருவாக்கிய பேராசிரியர் கு.ஞானசம்பந்தனிடம் பாப்பையாவின் நினைவுகளைப் பகிரக் கேட்டோம்.
“எங்கப்பா தமிழாசிரியர். அதனால் சிறு வயதிலிருந்தே மேடைப்பேச்சு, பட்டிமன்றங்களுக்கு என்னையும் அழைத்துச் செல்வார். அப்படியொரு நிகழ்ச்சியில், 15 வயதில் சாலமன் பாப்பையாவை முதன்முதலாகப் பார்த்தேன். அவரது பேச்சால் ஈர்க்கப்பட்டேன். பின்னர் அவர் அமெரிக்கன் கல்லூரிப் பேராசிரியர் என்பதைத் தெரிந்து கொண்டேன். கல்லூரியில் படித்தபோது நடந்த பேச்சுப் போட்டியில் 42 பேரில் 40-வது ஆளாகப் பேசி இரண்டாம் பரிசு பெற்றேன். அந்தப் பரிசை வழங்கிய சாலமன் பாப்பையா, என் பேச்சைப் பாராட்டினார். அதன் பிறகு அவரது அணியில் பட்டிமன்றப் பேச்சாளராகப் பயணிக்கத் தொடங்கினேன்.
பின்னர் நடுவராகும் தகுதியை வளர்த்துக் கொண்டு தனி அணியை உருவாக்கினேன். ஆனாலும், சாலமன் பாப்பையா என்னிடம் எந்தக் கோபமும் காட்டவில்லை. ‘வாங்க தம்பி...’ என்று வாய் நிறைய கூப்பிடுவார். எங்களுக்குள் இருந்த நட்பு என்றும் தொடர்ந்தது. நாங்கள் வெவ்வேறு தொலைக்காட்சிகளில் பேசியதால் வெளியிலிருந்து அரசியல் வேறுபாடு இருப்பதுபோல் தெரிந்தாலும், தனிப்பட்ட முறையில் அதைப் பற்றி ஒருபோதும் பேசிக்கொண்டதில்லை.
பட்டிமன்றப் பேச்சாளராக மட்டுமல்லாமல், அவர் நன்றாகப் பாடுவார், ஓவியம் வரைவார், கையெழுத்து முத்து முத்தாக இருக்கும். சினிமாவிலும் நடித்திருக்கிறார். ‘பேச்சுன்னா பாப்பையாதான்’ என்று சொல்லும் அளவுக்கு தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கியவர். அவரது மறைவு தமிழுக்கும் பட்டிமன்றக் கலைக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு” என்றார்.
டி.வி சீரியல் இயக்குநரும், பாப்பையாவின் மாணவருமான ஜெரால்டு கூறுகையில், ‘`வகுப்பறைக்குள் இருக்கும் சாலமன் பாப்பையாவின் முகம் நீங்க மேடையில பார்க்கிற முகம் கிடையாது. சீரியஸான பேராசிரியர். வேட்டி, சட்டையில் வர மாட்டார். டிப் டாப் டிரெஸ் கோடுலதான் இருப்பார். இலக்கண வகுப்பெல்லாம் எடுத்தா, அவ்வளவு தகுதி வாய்ந்ததா இருக்கும். அவர்கிட்ட படிச்ச நிறைய பேர் இன்னைக்கு எழுத்து, சீரியல், சினிமான்னு இயங்குறதுல நிச்சயம் அவருடைய வகுப்புகளுக்குப் பங்கு இருக்கு. `மகாபாரதம்’ குறித்துப் பேசினா, மொத்த வகுப்பும் பின் டிராப் சைலன்ஸுல இருக்கும்.
அதேபோல எல்லா மாணவர்களும் பிரசன்ட் ஆகியிருக்கிற ஒரு வகுப்புன்னாலும் அது இவருடைய வகுப்பாதான் இருக்கும். அப்படியிருந்தும் பிரேக்குக்கு அடுத்த பீரியடு ன்னா, வகுப்பு தொடங்கி சில நிமிடம் தாமதமா சிலர் வருவாங்க. அப்படி வரக் கூடாதுன்னு அபராதம் போடுவார். அந்தக் காசை மொத்தமா வசூலிச்சு ஒருநாள், `எல்லாரும் ஹோட்டல்ல போய் சாப்பிட்டு வாங்க’ன்னு அனுப்புவார்.
படிப்பு முடிச்சு வந்த பிறகும் மீடியாவுல இருந்ததால், நான் தொடர்ந்து தொடர்புலயே இருந்தேன். ஊருக்குப் போனா வீட்டுக்குப் போய் பார்த்துட்டு வருவேன். `என் பசங்க நல்ல புகழோட இருக்கறது சந்தோஷம்யா’ன்னு வாஞ்சையோட சொல்வார். வறுமை நிலையில இருந்து வந்து தமிழ்நாட்டில் எல்லாருடைய அன்பையும் பெற்றுவிட்டார். தனக்குப் படிக்கும் போது உதவி செஞ்ச நண்பனுடைய பெயரையே தன் மகனுக்கு வெச்சார்.
இன்னொரு முக்கியமான விஷயம், அவருடைய மதம் கடந்த மனிதம். `சாலமன்’ங்கிற அவருடைய பேரு, அவர் கிறிஸ்தவர்னு சொல்லும். ஆனா இவர் `மீனாட்சி என் ஆத்தா’ன்னு சொல்வார். மதுரையில் ஆன்மிகத்துடன் ரொம்பவே தொடர்புகொண்ட முன்னாள் சபாநாயகர் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் குடும்பத்துக்கு ரொம்பவே நெருக்கமானவர் பாப்பையா. பி.டி.ஆர் காலம் தொட்டு இப்போதைய பழனிவேல் தியாகராஜன் வரை தேர்தலில் நிற்கும்போது வேட்பு மனுவில் இவரிடம் நாமினேஷன் கையெழுத்து வாங்குவதை ஒரு சென்டிமென்ட்டாகவே வைத்திருக்கிறார்கள்’’ என்கிறார் ஜெரால்டு.
