சோபான சங்கீத சபை 5வது ஆண்டு விழா
பாலக்காடு: பாலக்காட்டில், சோபான சங்கீத கலைஞர்களின் கூட்டமைப்பான ‘சோபான சங்கீத சபை’யின் 5-வது ஆண்டு விழா, வரும் 20ம் தேதி நடக்கிறது.
கேரளாவின் பாரம்பரிய இசை வடிவமான சோபான சங்கீதத்தை பக்திப்பூர்வமாக இசைக்கும் மூத்த கலைஞர்களைக் கவுரவிக்கும் வகையில், இந்த ஆண்டு விழா ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், வெவ்வேறு பாணிகளில் இசைக்கப்படும் இந்த பாரம்பரிய கலையின் தூய்மை மற்றும் தனித்துவம் குறையாமல், அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் பயிற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
விழாவில், சோபான சங்கீத கலைஞர்கள் செத்தல்லூர் அச்சுத பொதுவாள், வண்டூர் உன்னி மாரார், கல்லேக்குளங்கரை விஸ்வநாத மாரார், அத்தாலூர் சுப்ரமணியன், கல்லூர் குஞ்சிக்குட்டன் மாரார், ஜெயசங்கர் திருமனி ஆகியோருக்கு விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட உள்ளது.
மறைந்த முன்னோர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் விதமாக, மறைந்த கலைஞர் பல்லாவூர் சந்தோஷுக்கு இறப்பிற்கு பிந்தைய சிறப்பு விருது வழங்கப்பட உள்ளது. மேலும், காலமான மூத்த கலைஞர்களின் குடும்பத்தினரும் விழாவில் கவுரவிக்கப்பட உள்ளனர்.
இத்தகவலை, அமைப்பின் நிர்வாக குழு உறுப்பினர்களான ஜோதிதாஸ், விஜயகுமார், அனில் மாரார், ரஞ்சித் பிஷாரடி ஆகியோர் தெரிவித்தனர்.