Politics
18வது பிரிக்ஸ் உச்சி மாநாடு டெல்லியில் இன்று தொடக்கம் - உலகத் தலைவர்கள் பங்கேற்பு!

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் இணைந்து கடந்த 2006ஆம் ஆண்டு பிரிக்ஸ் அமைப்பை தொடங்கின. 2010ஆம் ஆண்டு அந்தக் கூட்டமைப்பில் தென் ஆப்பிரிக்கா இணைந்ததை அடுத்து பிரிக்ஸ் கூட்டமைப்பு விரிவாக்கம் செய்யப்பட்டது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரஷ்யா, சீனா உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பங்கேற்கும் 18வது பிரிக்ஸ் உச்சி மாநாடு டெல்லியில் இன்று தொடங்குகிறது.
அதன்பின், எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேஷியா, ஈரான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய ஆறு நாடுகள் உறுப்பு நாடுகளாகவும், மலேசியா, தாய்லாந்து, கியூபா உள்ளிட்ட 10 நாடுகள் இணைப்பு நாடுகளாகவும் கூட்டமைப்பில் இணைந்தன.
இந்நிலையில், பிரிக்ஸ் அமைப்பின் 18வது உச்சி மாநாடு டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. 4வது முறையாக இந்தியா தலைமை ஏற்று மாநாட்டை நடத்தும் நிலையில், மீள்திறன், புத்தாக்கம், ஒத்துழைப்பு, நிலைத்தன்மை ஆகியவற்றை கருப்பொருளாகக் கொண்டு மாநாடு நடைபெறுகிறது.
மாநாட்டில் பங்கேற்க வந்த ரஷ்ய அதிபர் புதினுக்கு உற்சாக வரவேற்பளித்த பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தை பரிசாக வழங்கினார். அதைத் தொடர்ந்து இரு நாட்டு தலைவர்களும் பாதுகாப்பு, வர்த்தகம், சர்வதேச விவகாரங்கள், உக்ரைன் போர், மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றமான சூழல் உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார நிலைத்தன்மையற்ற சூழலுக்கு மத்தியிலும் இந்தியா வேகமாக வளர்ந்து வருவதாகத் தெரிவித்தார். அதேபோல், அமெரிக்கா ஜி7 அமைப்பை காட்டிலும், பிரிக்ஸ் கூட்டமைப்பு சர்வதேச பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்தார்.
ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான், ஐநா பொதுச் செயலாளர் ஆண்டோனியோ குட்ரெஸ் உள்ளிட்டோரை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்கள் ஒன்றாக இணைந்து குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். டெல்லி பாரத் மண்டபத்தில் பிரிக்ஸ் உச்சி மாநாடு இன்று தொடங்கும் நிலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
