Politics
“இரண்டு தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும்” – எடப்பாடி பழனிசாமி

இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை.
சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “இடைத் தேர்தல் நடைபெறும் இரண்டு தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும்” எனத் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது; ”தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என நாங்கள் அல்ல, தவெக ஆட்சிக்கு ஆதரவு அளிக்கும் சிபிஐ தலைவர்களே சொல்கிறார்கள். தவெக ஆட்சியில் லஞ்சம் அதிகரித்துள்ளது. முதலமைச்சர் தன் வசம் வைத்துள்ள நகராட்சித் துறை மானியக் கோரிக்கையைக் கூட அவர் தாக்கல் செய்யவில்லை. அவருக்கு பதிலாக அமைச்சர் தாக்கல் செய்கிறார்.
தவெக ஆட்சி அமைந்த பிறகு விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. விலைவாசியை கட்டுப்படுத்த அரசு கவனம் செலுத்தவில்லை. நெல் கொள்முதல் செய்யாததன் காரணமாக விவசாயிகள் சிரமத்தைச் சந்தித்துவருகின்றனர். இது குறித்து சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினேன். ஆனால், அதற்கு முதலமைச்சர் பதில் கொடுக்கவே இல்லை.
இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள இரண்டு தொகுதிகளும் ஏற்கனவே அதிமுக வெற்றி பெற்ற இடங்கள். ஆனால், குதிரை பேரம் நடத்தி எங்களின் எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்யவைத்தார்கள். இரண்டு தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் நிறுத்தப்படு, அவர்கள் வெற்றி பெறுவார்கள். ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் பிரச்சனைகளை பேசுகிறார்களே தவிர, மக்கள் பிரச்சனைகளை பற்றி பேசுவதில்லை. ஆளுங்கட்சி செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்புகிறோம். ஆனால், ஆளுங்கட்சி தரப்பில் இருந்து எந்தப் பதிலும் கொடுக்கப்படவில்லை” எனத் தெரிவித்தார்.
