நகர திட்ட சாலைகள் மேம்பாடு நிதி ஒதுக்க எதிர்பார்ப்பு
உடுமலை: உடுமலை நகர போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, கிடப்பில் போடப்பட்டுள்ள திட்டச்சாலை பணிகளை துவக்க, அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
உடுமலை நகரம் கோவை–திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, மாநில நெடுஞ்சாலை மற்றும் நான்கு வழிச்சாலைக்கு செல்வதற்கான இணைப்பு ரோடுகள் போதியளவு நகரில் இல்லை.
இதனால், அனைத்து வாகனங்களும் நகரின் பிரதான ரோடுகளில் அணிவகுப்பதால், காலை மற்றும் மாலை நேரங்களில், பஸ் ஸ்டாண்ட், பழைய பஸ் ஸ்டாண்ட், தளி ரோடு சந்திப்பு உட்பட பகுதிகளில், நெரிசலும், விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன.
இவ்வாறு, கிராமப்புறங்களிலிருந்து வரும் வாகனங்கள் நகருக்குள் வராமல், பிற பகுதிகளுக்கு செல்ல பல்வேறு திட்டச்சாலைகள் உடுமலையில் உள்ளன.
உதாரணமாக, பல்லடம், திருப்பூர், செஞ்சேரிமலை உட்பட பகுதிகளிலிருந்து வரும் வாகனங்கள், நகர எல்லையிலுள்ள ஏரிப்பாளையத்திலிருந்து நகருக்குள் வராமல், மற்றொரு எல்லையான கொழுமம் ரோடு சந்திப்பிற்கு செல்ல திட்டச்சாலை உள்ளது.
ஆனால், திட்டச்சாலையிலுள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் சாலை மேம்பாட்டுப்பணிகள் மேற்கொள்ளப்படாதது ஆகிய காரணங்களால், அவை காணாமல் போய் போக்குவரத்து தடைபட்டுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன், தாராபுரம் ரோட்டிலிருந்து சிறிது துாரத்திற்கு திட்டச்சாலை தார்ரோடாக மாற்றப்பட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்றவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன்பின்னர், ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் இதுவரை இல்லை. உடுமலை நகர எல்லைகளிலுள்ள, நான்கு திட்ட சாலைகளிலும், ஆக்கிரமிப்புகளை அகற்றி, தார்ரோடு அமைத்தால், நகருக்குள் நெரிசல் முற்றிலுமாக தவிர்க்கப்படும். அரசு திட்டச்சாலை மேம்பாட்டு பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.