Crime, law and justice
தமிழகத்துக்கு தண்ணீர் உத்தரவை எதிர்த்து இன்று சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல்

பெங்களூரு: தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்ட, காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகா இன்று மனு தாக்கல் செய்கிறது.
தமிழகத்துக்கு தினமும் வினாடிக்கு, 6,000 கனஅடி வீதம், அடுத்த, 15 நாட்களுக்கு, காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடகாவுக்கு, காவிரி நீர் ஒழுங்காற்று குழு, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தது.
இதுகுறித்து, கர்நாடக நீர்ப்பாசன துறை அமைச்சர் செலுவராயசாமி நேற்று கூறியதாவது:
தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கூறிய, காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவு தொடர்பாக, முதல்வர் சிவகுமார், சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தினோம். நாளை ஆணைய உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளோம்.
அணைகளில் நீர்இருப்பு குறைவாக உள்ளது. இங்கிருந்து திறந்து விட தண்ணீர் இல்லை. எங்களுக்கு குடிநீர் பிரச்னை ஏற்படாமல் பார்த்து கொள்ள முன்னுரிமை அளிப்பதுடன், வறண்டு போன ஏரி, குளங்களுக்கு தண்ணீர் நிரப்ப வேண்டிய கட்டாயம் உள்ளது.
காவிரி நீர் மேலாண்மை உத்தரவை அமல்படுத்த மாட்டோம். தமிழக அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கிறது. காவிரி பிரச்னையில் முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை பரிந்துரைபடி, உச்ச நீதிமன்றத்தில் வாதாட சிறப்பு வக்கீலை நியமிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை கண்டித்து, மாண்டியாவில் நேற்று கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.