வீரர் குடும்பம் அடையாளம் காண வழக்கு
மதுரை: மதுரை கதிர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:
மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட 14 தென்மாவட்டங்களை சேர்ந்தவர்களில் பணியின்போது இறந்த பாதுகாப்பு படை வீரர்களின் குடும்பத்தினரை அடையாளம் காண வேண்டும். அவர்களுக்குரிய நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும். கருணை அடிப்படையில் பணி நியமனம் கோரும் விண்ணப்பங்களை பரிசீலிக்க வலியுறுத்தி மத்திய பாதுகாப்புத்துறை செயலர், தமிழக தலைமைச் செயலருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வு மத்திய பாதுகாப்புத்துறை செயலர், தமிழக தலைமைச் செயலர், பொதுத்துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு அக்.,8 க்கு ஒத்திவைத்தது.