Arts, culture, entertainment and media
பாலவாக்கம், ஊத்துக்கோட்டை அரசு பள்ளிகளில் மைதானத்தில் அமர்ந்து பயிலும் மாணவ - மாணவியர் வகுப்பறை: பற்றாக்குறையால் தொடரும் அவலம்

ஊத்துக்கோட்டை:வகுப்பறை பற்றாக்குறையால், பாலவாக்கம், ஊத்துக்கோட்டை அரசு பள்ளிகளில், மாணவ - மாணவியர் மைதானம், மரங்களின் நிழலில் அமர்ந்து பாடம் பயில வேண்டிய அவல நிலை உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி கல்வி மாவட்டத்தில், 135 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இதில், சில பள்ளிகளில் வகுப்பறை பற்றாக்குறையால், மரத்தடி நிழல், பள்ளி மைதானம் ஆகியவற்றில் அமர்ந்து, மாணவ - மாணவியர் பாடம் கற்க வேண்டிய நிலை உள்ளது.
பொன்னேரி கல்வி மாவட்டத்தில் உள்ள பாலவாக்கம், ஊத்துக்கோட்டை ஆகிய அரசு பள்ளிகளில், இதே நிலை பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது.
பாலவாக்கம் கிராமத்தில், 1966ம் ஆண்டு தொடங்கப்பட்ட உயர்நிலைப் பள்ளியில், பாலவாக்கம், லட்சிவாக்கம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, 300க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் கல்வி பயில்கின்றனர்.
பழைய கட்டடத்தில் இரண்டு வகுப்பறைகள் உள்ளன. அங்கிருந்து, 200 மீட்டர் துாரமுள்ள மற்றொரு இடத்தில், ஐந்து வகுப்பறைகள் உள்ளன. பழைய கட்டடத்தில் வகுப்பறை பற்றாக்குறையால், மாணவ - மாணவியர் மைதானத்தில் அமர்ந்து கல்வி பயில வேண்டிய அவல நிலை உள்ளது.
தாலுகா தலைநகரான ஊத்துக்கோட்டையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, 1999ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இப்பள்ளியில், 700 மாணவியர் பயின்று வருகின்றனர்.
ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவியருக்கு, 15 வகுப்பறைகள் மட்டுமே உள்ளன. வகுப்பறை பற்றாக்குறையால், மாணவியர் பாடம் கற்கவும், தேர்வுகள் எழுதவும் மைதானத்தையே பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.
மழைக்காலங்களில், மாணவியர் வகுப்பறையும் இல்லாமல், வெளியேயும் அமர முடியாமல் அவதிப்படுகின்றனர். ஊத்துக்கோட்டை வட்டத்தில் இன்று ஆய்வுக்கு வரும் கலெக்டர் கவிதா, மேற்கண்ட பள்ளிகளில் நேரில் ஆய்வு செய்து, வகுப்பறை பற்றாக்குறைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என, மாணவ - மாணாவியர், பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.