Politics
இந்த தீபாவளிக்கு கலர் கலர் புடவை அள்ளலாம்... கோ-ஆப்டெக்ஸில் அதிரடி 30% அரசு தள்ளுபடி

தீபாவளி ஷாப்பிங்கிற்கு வாடிக்கையாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.
தீபாவளி 2026 சிறப்பு தள்ளுபடி விற்பனையை தஞ்சாவூர் வைரம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ரேவதி தொடங்கி வைத்தார். இந்த விற்பனையின் மூலம் வாடிக்கையாளர்கள் 30 சதவீத அரசு தள்ளுபடியைப் பெறலாம்.
தஞ்சாவூர் வைரம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி 2026 சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சித்தலைவர் ரேவதி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ், கடந்த 91 ஆண்டுகளாக கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் கைத்தறி ரகங்களை கொள்முதல் செய்து, நாடு முழுவதும் உள்ள விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்து வருகிறது. இதன் மூலம் நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில், தமிழக அரசு வழங்கும் 30 சதவீத சிறப்பு தள்ளுபடி விற்பனை திட்டம் கோ-ஆப்டெக்ஸ் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இந்த விற்பனையில் கோவை மென்பட்டு புடவைகள், காஞ்சிபுரம், சேலம், ஆரணி, திருபுவனம் உள்ளிட்ட பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பட்டுப்புடவைகள், கோவை கோரா காட்டன் சேலைகள், கூறைநாடு புடவைகள் உள்ளிட்ட பல்வேறு கைத்தறி ஆடைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு தீபாவளியின்போது தஞ்சாவூர் வைரம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் 1 கோடியே 68 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது. இந்த ஆண்டு 2 கோடி ரூபாய் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் ரேவதி விற்பனையை துவக்கி வைத்ததுடன், பட்டு ரகங்கள் குறித்து ஊழியர்களிடம் கேட்டறிந்தார். மேலும், வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் கோ-ஆப்டெக்ஸ் மாதாந்திர சேமிப்பு திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதில் 11 மாத சந்தா தொகையை வாடிக்கையாளர்கள் செலுத்தினால், 12-வது மாத சந்தா தொகையை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் செலுத்துகிறது. முதிர்வு தொகைக்கு தேவையான துணிகளை 30 சதவீத அரசு தள்ளுபடியுடன் பெற்றுக்கொள்ளும் வசதியும் உள்ளது. தீபாவளியை முன்னிட்டு கைத்தறி மற்றும் பட்டு ரகங்களை வாங்க விரும்பும் பொதுமக்கள், தஞ்சாவூர் வைரம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் வழங்கப்படும் சிறப்பு தள்ளுபடி விற்பனையை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




