Crime, law and justice
நேர்மையான வழியில் நல்ல பெயரை எடுங்கள்: ஐகோர்ட் நீதிபதி அட்வைஸ்
விழுப்புரம்: சட்டக்கல்லுாரி படிப்பை முடித்த மாணவர்கள் தொழிலில் பொறுமையாக செல்வதோடு, எந்தவொரு குறுக்கு வழியையும் கையாளாமல் பயணிக்க வேண்டும் என ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறினார்.
விழுப்புரம் அரசு சட்டக்கல்லுாரியில் நடந்த 2வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற, சென்னை ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பேசியதாவது:
வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய நம்மிடம் கடின உழைப்பு, விடாமுயற்சி கண்டிப்பாக இருக்க வேண்டும். உங்களுடைய தாரக மந்திரம் எதுவாக இருக்க வேண்டுமென்றால் உங்கள் இலக்கை நீங்கள் மனதார நேசிக்க வேண்டும்.
இதற்கு நீங்கள் உங்களின் இலக்கை முதலில் தேர்வுசெய்ய வேண்டும். நீங்கள் செய்யும் தொழிலில் பொறுமையாக செல்ல வேண்டும்.
எந்தவொரு குறுக்கு வழியையும் கையாளாமல் பயணிக்க வேண்டும். நீங்கள் செய்யும் தொழில் எதுவாக இருந்தாலும் நேசித்தும், பொறுமையோடும் செய்யுங்கள்.
நிரந்தர வெற்றி உங்களை எந்தளவிற்கும் எடுத்து கொண்டு போய்விடும். சில நல்ல பண்புகளை நீங்கள் கடைபிடித்தால் உங்களுக்கு வாழ்வில் தோல்விக்கு வாய்ப்பே இல்லை. நீங்கள், உங்களின் அறிவை தொடர்ந்து வளர்த்து கொண்டால் பணத்தை பற்றி எந்த கவலையும் வராது.
தினந்தோறும் உடற்பயிற்சி, நடைபயிற்சி செய்யுங்கள். புத்தகம் வாசிப்பதிலும், இலக்கிய உலகிலும் ஆர்வத்தை காட்டுங்கள். தற்போதைய காலகட்டத்தில் திரையுலகு, சோசியல் மீடியா ஆகிய எதிலும் மூழ்காமல் நிஜ உலகத்தில் மனிதர்களோட ஆழமான உறவகளை வளர்த்து கொள்ளுங்கள்.
நம் அனைவருக்கும் மொழிப்பற்று இருக்க வேண்டும். நமது மொழி மிகவும் தொன்மையான ஒரு மொழி. வளமான தமிழ் மொழியை நம் தாய்மொழியாக நாம் பெற்றிருப்பதற்கு, நாம் ஒவ்வொரு நொடியும் பெருமைப்பட வேண்டும். நேர்மையான வழியில் நின்று நல்ல பெயரை எடுங்கள். நீதிமன்றம் உங்களுக்காக காத்து கொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.