Politics
இலங்கையை சுற்றி ஈரானிய கப்பல்கள்... குறிவைக்கும் அமெரிக்கா... தமிழ்நாட்டுக்கு அச்சுறுத்தலா?

அமெரிக்கா, ஈரானின் ஹார்முஸ் ஜலசந்தி, ஓமனின் வளைகுடாவில் கடுமையான கடற்படை முற்றுகையை அமல்படுத்தியிருந்ததால், இந்தக் கப்பல்களால் நாடு திரும்ப முடியவில்லை
இந்தியப் பெருங்கடலின் தென்பகுதியில், இலங்கையின் கால் (Galle) துறைமுகத்துக்கு மிக அருகில், டஜன் கணக்கிலான ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் நங்கூரமிட்டு மிதந்துகொண்டிருக்கின்றன. இந்தக் கப்பல்களால், ஈரான் - அமெரிக்கா யுத்தம் தமிழ்நாட்டின் வாசற்படி வரை வந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும்!
கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களிலிருந்தே இலங்கையின் கால் (Galle) துறைமுகத்துக்குச் சற்று தூரத்தில் ஈரானிய எண்ணெய் டாங்கர் கப்பல்கள் திரளத் தொடங்கின. சுமார் 12 முதல் 20 ஈரானியக் கப்பல்கள் ஒன்றரை மாதத்துக்கு மேலாக இலங்கைக்கு அருகே தஞ்சமடைந்திருப்பதாகச் செய்திகள் வருகின்றன.
இந்தக் கப்பல்கள் தவிர, மலேசியாவின் பிரத்யேக பொருளாதார மண்டலத்துக்கு வெளியேயும் சுமார் 48 ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் நிறுத்தப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த ஈரானியக் கப்பல்கள் அனைத்தும் சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்குத் தங்களது கச்சா எண்ணெயைக் கொண்டு சென்று இறக்கிவிட்டு, காலியாக ஈரானை நோக்கித் திரும்பிக்கொண்டிருந்த கப்பல்கள் எனத் தெரிகிறது.
ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்க முற்றுகை...
இலங்கையில் சிக்கிய ஈரானியக் கப்பல்கள்!
அமெரிக்கா, ஈரானின் ஹார்முஸ் ஜலசந்தி, ஓமனின் வளைகுடாவில் கடுமையான கடற்படை முற்றுகையை அமல்படுத்தியிருந்ததால், இந்தக் கப்பல்களால் நாடு திரும்ப முடியவில்லை. இதுவரை, ஈரானை நோக்கி நகர்ந்த 90-க்கும் மேற்பட்ட வணிகக் கப்பல்களை அமெரிக்கப் படைகள் திருப்பி விட்டிருக்கின்றன. பல கப்பல்கள்மீது தாக்குதலும் நடத்திச் சேதப்படுத்தியிருக்கின்றன. அமெரிக்கக் கப்பல்களுக்கு அஞ்சி நாடு திரும்பாமல் சர்வதேச நீர்ப்பகுதிகளில் தஞ்சமடைந்திருக்கின்றன ஈரானியக் கப்பல்கள்.
சர்வதேசக் கடல் சட்டத்தின்படி, ஒரு நாட்டின் கரைப் பகுதியிலிருந்து 12 நாட்டிக்கல் மைல் தொலைவு வரை மட்டுமே அந்த நாட்டின் பிராந்திய கடல் எல்லை இருக்கும். 12 நாட்டிக்கல் மைலுக்கு வெளியே இருக்கும் சர்வதேச நீரில் எந்தவொரு நாட்டின் கப்பலும் பயணிக்க முழுச் சுதந்திரம் உண்டு. அதேநேரம், `ஆபத்தில் இருக்கும் கப்பல்கள் அல்லது மாலுமிகளுக்கு அருகில் இருக்கும் நாடுகள் மனிதாபிமான அடிப்படையில் உதவ வேண்டும்’ என்கிறது சர்வதேசக் கடல் சட்டம்.
ஆனால், `ஈரானியக் கப்பல்கள் எங்களிடம் அதிகாரபூர்வமாக எவ்வித உணவோ, தண்ணீரோ அல்லது எரிபொருள் உதவியோ கேட்கவில்லை’ என்றும், `12 நாட்டிக்கல் மைலுக்கு வெளியே நிற்பதால், அவற்றின் மீது எங்கள் அரசுக்குச் சட்டபூர்வ அதிகார வரம்பு இல்லை’ என்றும் இலங்கை அதிகாரிகள் கூறுகின்றனர்.
இலங்கை அரசு ஈரானியக் கப்பல்களுக்கு உதவ மறுப்பதாகப் பரவும் தகவல்களுக்குப் பின்னால், அமெரிக்காவின் கடுமையான ராஜதந்திர, ராணுவ அழுத்தங்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள். ``கடந்த மார்ச் மாதம், ஈரான் போர்க்கப்பல் அமெரிக்கத் தாக்குதலிலிருந்து தப்பிக்க இலங்கை அரசிடம் தஞ்சம் கோரியது. ஆனால், அமெரிக்காவின் எதிர்ப்பால் இலங்கை அரசு அந்தக் கப்பலுக்கு அனுமதி மறுத்தது.
கடல் வளமும், மீன் வளமும் பாதிக்கும்!
இலங்கையின் கடல் எல்லைக்கு வெளியே நின்றுகொண்டிருந்த அந்தப் போர்க்கப்பல்மீது அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பல் ஏவுகணையை வீசித் தாக்கியது. இதில் 80-க்கும் மேற்பட்ட ஈரானியக் கடற்படை வீரர்கள் பலியாகினர். இந்தச் சம்பவத்தை மனதில்வைத்துத்தான் இலங்கை அரசு, ஈரானியக் கப்பல்களுக்கு உதவ மறுக்கிறது. அதோடு, அமெரிக்கத் தரப்பிலிருந்து இலங்கை அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், `ஈரானியக் கப்பல்களுக்கு உதவினால், இலங்கை மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிப்போம்’ என்று அமெரிக்க அதிகாரிகள் மிரட்டியிருக்கவும் வாய்ப்பிருக்கிறது’’ என்கிறார்கள்.
ஈரானியக் கப்பல்கள் அதே இடத்தில் நிலை கொண்டால், அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்பிருக்கிறது. இந்தியப் பெருங்கடலிலுள்ள ஈரானியக் கப்பல்கள்மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், அது இலங்கைக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கும் பாதிப்பை உண்டாக்கும். ``ஈரானியக் கப்பல்களில் எண்ணெய் மிச்சமிருக்கும் பட்சத்தில் இந்தத் தாக்குதல் நடந்தேறினால், எண்ணெய்க் கழிவுகளால் கடல் வளமும், மீன் வளமும் பாதிக்கும். ராமேஸ்வரம், தூத்துக்குடி, நாகப்பட்டினம் மீனவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்.
மேலும், இந்தியப் பெருங்கடலில் போர் மேகம் மூண்டால், அது இந்திய பிராந்திய எல்லைப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும். இலங்கை கடற்பகுதி வழியாக சீனா, ஜப்பான், கிழக்கு ஆசிய நாடுகளுக்கான சர்வதேச முக்கியக் கப்பல் போக்குவரத்து பாதை அமைந்திருக்கிறது. இங்கு மோதல் வெடித்தால், வர்த்தகக் கப்பல்கள் பாதிக்கப்பட்டு, எரிபொருள் விலையேற்றம் ஏற்படும்’’ என்கிறார்கள் பாதுகாப்புத்துறையை உற்று நோக்குபவர்கள்.
இலங்கையிடமிருந்து உதவிகள் கிடைக்காத நிலையில், பாகிஸ்தான், இந்தோனேசியா, மலேசியா நோக்கி நகரும் திட்டத்தில் ஈரானியக் கப்பல்கள் இருப்பதாகத் தெரிகிறது. தமிழகக் கடற்கரைக்கு அருகில் நடக்கும் இந்த நகர்வுகளை இந்திய கடற்படையும், உளவுத்துறையும் அதீத எச்சரிக்கையுடன் கண்காணித்துவருகின்றன.
அமெரிக்க - ஈரான் ஈகோ யுத்தத்தால் இன்னும் என்னவெல்லாம் பாதிப்புகள் வருமோ?
