Politics
விஜய் நூறுநாள் ஆட்சி! ரீல் அறுந்து தொங்கிப் போச்சு!

வேந்தமை வில்லாத நாடு.
-குடிமக்கள் மீது அன்பு இல்லாத அரசு அமைந்துவிட்டால் அதனால் ஒரு நன்மையும் இல்லை என்கிறார் வள்ளுவர்.
தமிழகத்தில் புதிதாக த.வெ.க. அரசு அமைந்து முதல் நூறு நாட்களைத் தாண்டியிருக்கிறது. இந்த நூறு நாட்களில் என்னென்ன நடந்திருக்கிறது என பார்ப்போம். அதன்பிறகு முதல்வருக்கு மக்கள் மீது அன்பிருக்கிறதா... இல்லையா என்பதை மக்கள் முடிவுக்கே விட்டுவிடலாம்.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிலிருந்த ரூ 100 கோடி மதிப்புடைய 1.40 ஏக்கர் நிலம், இரு தனிநபர்களுக்கு ஜூலை 6, 2026 அன்று பத்திரப்பதிவு செய்யப்பட்டது. பழனி சார்பதிவாளர் விடுமுறையில் அனுப்பப்பட்டு, அந்த இடத்துக்கு கொடைக்கானல் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் கூடுதல் பொறுப்பில் பழனி அலுவலகத்துக்கு வந்து முடித்துக்கொடுத்தது அம்பலமானது. பழனி கோயில் நிலப் பத்திரப்பதிவு முறைகேடு வழக்கில் கைதுசெய்யப்பட்ட வழக்குரைஞர் அன்வர்தீன் மதுரை மத்திய சிறையில் 2026 ஆகஸ்ட் 7 இரவு உயிரிழந்ததும் சர்ச்சையானது
த.வெ.க. அரசு பொறுப்பேற்ற முதல் 140 மணி நேரத்திற்குள் 24 கொலைகள்; 100 நாட்களில் 200-க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளன.
திருவொற்றியூரில் 18 வயது பள்ளி மாணவர் தனுஷ் சக மாணவர் குழுவினரால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
கோவை சூலூரில் 10 வயதுச் சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டாள்.
விழுப்புரத்தில் 65 வயது முதியவரால் 5-ஆம் வகுப்புப் பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டாள்
திருச்சியில் 14 வயதுச் சிறுமியை, சிறுவர்கள் பெரியவர்கள் உள்ளிட்ட 9 பேர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது பேசுபொருளானது.
சாதி மாறிக் காதலித்ததாகக் கூறி, நெல்லை மாவட்டம் சுத்தமல்லியைச் சேர்ந்த தலித் இளைஞரைக் காதலித்த ராமலட்சுமி என்ற இளம்பெண் தனது சகோதரரால் கொலை செய்யப்பட்டாள்.
மயிலாடுதுறையில் தலித் இளைஞர் பார்த்திபனும் அவரைக் காதலித்த பெண்ணும் ஆணவக் கொலைசெய்து தூக்கிலிடப்பட்டனர்.
தையூர் பகுதியைச் சேர்ந்த த.வெ.க. நிர்வாகி ஏழுமலை, தனது மகளைக் காதலித்த பிரவீனை ஆணவக் கொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இப்படி அடுக்க இன்னும் இருக்கிறது ஏராளம்.
காவிரி விவகாரத்தில் பலவீனமான அணுகுமுறை வழக்கமாக தமிழகத்துக்கு வரவேண்டிய தண்ணீரை முதல்வரால் கேட்டு வாங்க முடியவில்லை.
அதற்காக அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டத் தயங்கிய, முதல்வர் பெங்களூரு போய் அம்மாநில முதல்வர் சிவக்குமாரைச் சந்திக்கத் தயாராக இருந்தார். எதிர்க்கட்சிகள் அது நல்ல யோசனையில்லை என்றதை அலட்சியம் செய்தார். இந்நிலையில், பெங்களூரு முதல்வரே இங்கு நிலைமை சரியில்லை என்று முதல்வர் விஜய் வரவேண்டாமென புறக்கணித்தார். மேகேதாட்டு அணை விவகாரத்திலும் கர்நாடகத்தின் மீறல்களை சட்டரீதியாகத் தடுக்க சுறுசுறுப்பான நடவடிக்கை எடுத்ததுபோல் தெரியவில்லை.
விஜய் பவருக்கு வந்துட்டார்.
இரவும் பகலும் மின்வெட்டு பல்லிளித்துக்கொண்டிருக்கிறது. மின்கட்டணமோ, எல்லாரின் பர்ஸையும் கிழிய வைத்துக்கொண்டிருக்கிறது.
தூய சக்தி, தூய்மைப் பணியாளர்களைப் புறக்கணிக்கும் சக்தி
சென்னை உள்ளிட்ட நகரங்களில் குப்பை அகற்றுதல் முறையாக நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. தூய்மைப் பணியாளர்களோ, எங்க ஓட்டை வாங்கி ஆட்சிக்கு வந்தீங்களே… என்ன செஞ்சீங்க எங்களுக்கு என கேள்வியெழுப்பி போராடிவருகின்றனர்.
சட்டமன்ற மாண்பு போச்சு!
சட்டமன்றக் கூட்டத்தில், எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பினால் ஆதவ், நிர்மல்குமார், ராஜ்குமார் மூவர் மட்டும்தான் பதிலளிக்கின்றனர். கேள்வி கேட்கப்பட்ட துறை அமைச்சர் பதிலளிப்பதில்லை. தவிரவும், கேட்ட கேள்விக்குப் பதிலளிக்காமல் ஏறுக்குமாறு பேசி, எதிர்க்கட்சிகளையும், மக்களையும் திசைதிருப்புவதுதான் இவர்களின் இலக்காயிருக்கிறது. அத்தோடு சட்டமன்ற மரபு மீறலையும் இயல்பாக்க முயல்கிறார்கள்.
ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் என வாய்ச்சவடால் விட்டிருந்தார் முதல்வர் ஜோசப் விஜய். பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டுவராததுடன், விஜய் அரசு, முந்தைய அரசு அறிவித்த பஆடந-க்கான ரூ.11,000 கோடி ஒதுக்கீட்டை ரத்து செய்துள்ளது.
சேலம் மாநகராட்சியில், மேயர் உள்ளிட்ட மக்கள் தேர்ந்தெடுத்த கவுன்சிலர்களின் எதிர்ப்பையும் மீறி தண்ணீர் விநியோகத் திட்டம் சூயஸ் என்ற கார்ப்பரேட் கம்பெனிக்குத் தாரைவார்க்கப்பட்டுள்ளது.
திடீரென சென்னையில் உள்ளவர்களுக்கு சொத்து வரி உயர்த்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஏற்கெனவே நடைமுறையில் இருந்த வரியைவிட பத்து மடங்கு அதிகமாக இருப்பதாக கொந்தளிப்பு எழுந்த நிலையில் தற்காலிகமாக அதிலிருந்து பின்வாங்கியுள்ளது த.வெ.க. அரசு.
"பத்து ரூபா யாருக்கு சார் போகுது' என தேர்தல் பிரச்சாரத்தில் கேள்வியெழுப்பினார் விஜய். விஜய் ஆட்சியிலும் அந்தப் பத்து ரூபா வசூல் தொடரவே செய்கிறது. டாஸ்மாக் ஊழியர்கள் கடை வாடகை, மின்சாரக் கட்டணம், பாட்டில் திரும்பப் பெறுவதற்கான இடம் மற்றும் பராமரிப்புச் செலவுகளை சமாளிக்க முடியாததால், பாட்டிலுக்கு கூடுதலாக ரூ 10 வாங்கும் நடைமுறைக்கு பழக்கப்பட்டுவிட்டனர். ஒரே நாளில் மாற்றம் வந்துவிடாது என்கிறார் டாஸ்மாக் துறை அமைச்சர் விக்னேஷ். டாஸ்மாக் தனியார்மயமாகப் போகிறதென்று யூகம் எழுந்திருக்கிறது. எஃப்.எல்.2 பார்கள் அதிகரித்துள்ளன. டாஸ்மாக் பணியாளர்கள் தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்ய ஆலோசித்துக்கொண்டிருக்கின்றனர். இது தானா சார் நீங்க சொன்ன மாற்றம்?
கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, சேலம், மதுரை, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் தனியார் பேருந்துகள் டீசல் விலை உயர்வைக் காரணம் காட்டி, நடைமுறையிலிருப்பதைவிட 50 சதவிகிதம் முதல் 100 சதவிகிதம் வரை கட்டணத்தை உயர்த்தியதாக புகாரெழுந்தது.
பெயரை மாற்றினால் போதுமா?
ஆட்சிக்கு வந்த கொஞ்ச நாட்களிலே மெல்ல தன் சுயரூபத்தைக் காட்டத் தொடங்கிவிட்டார் விஜய். தி.மு.க. ஆட்சியின் திட்டங்களில் சிறிய மாற்றங்களைச் செய்துவிட்டு அவையனைத்துக்கும் வெற்றி என்ற பெயரை இணைத்து தனது திட்டங்களாக மாற்றிக்கொள்கிறார். மகளிருக்கான இலவசப் பேருந்து திட்டம் வெற்றிப் பயணத் திட்டமாகவும், உலகம் உங்கள் கையில்- என்ற தி.மு.க.வின் மடிக்கணினி திட்டம் வெற்றி லேப்டாப் திட்டமாகவும் மாறியுள்ளது. சுயமாக சிந்தித்து புதிய திட்டங்கள் அறிவிக்காமல் அடுத்தவர் பிள்ளைக்கு உங்க இனிஷியலை போட்டுக்கொள்வது நியாயமா சார்?
பாதிக்கப்பட்டவர்களை எப்போது சந்திப்பார்?
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் பகுதியில் உள்ள கடலுணவு ஏற்றுமதி நிறுவனத்தில் 2026 ஜூன் 21 அன்று ஏற்பட்ட அம்மோனியா வாயுக் கசிவில் 18 பேர் உயிரிழந்தனர். 83 தொழிலாளர்கள் பாதிக்கப் பட்டனர்.
விஜய் ஆட்சிக்கு வந்தபின் சாதியக் கொலை, ஆணவக் கொலை, அம்மோனியா வாயுக் கசிவால் பாதிப்பு இப்படி எதிலும் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதோ, வருத்தம் தெரிவிப்பது என்ற பண்பையே பார்க்கமுடியவில்லை.
மொத்தத்தில் த.வெ.க.வின் நூறு நாள் ஆட்சியில், அதிருப்தி கோலோச்ச, திருப்தி தலைமறைவாக காணப்படுவதுதான் நிஜம். ஆட்சிக்கு வந்தபின்னும், த.வெ.க.வினர் ரீல்ஸ் போடுவதில் காட்டும் அக்கறையை மக்கள் நலப் பணிகளில் காட்டவில்லை.
கைவிடப்பட்ட பரந்தூர் விமான நிலையம்!
பரந்தூர் விவகாரத்தில் விவசாயிகளின் நலன் மீது அக்கறை இருப்பதுபோல் விஜய் காட்டிக்கொண்டாலும், அத்திட்டத்தைக் கைவிடுவதாக அறிவிப்பது பெரிதும் முதல்வரின் ஈகோ பிரச்சனைதான். தி.மு.க. ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டத்தை முடக்கவேண்டும் என்ற எதிர்க்கட்சி மீதான காழ்ப்புதான்.
சரி, விமான நிலையத் திட்டத்தை கைவிட்டு அங்கு சிப்காட் வந்து தோல் தொழிற்சாலையோ, ரசாயனத் தொழிற்சாலையோ வந்தால் அங்குள்ள விவசாயிகள் பாதிக்கப்படமாட்டார்களா? பரந்தூருக்காக கையகப்படுத்திய நிலத்தை இனி விஜய் அப்பகுதி விவசாயிகளிடம் ஒப்படைத்துவிடுவாரா? நிலத்துக்காகக் கொடுத்த நிவாரணத்தை விவசாயிகள் செலவழித்திருந்தால் அதை எப்படி திரும்பப்பெறுவார் அல்லது பணத்தை விஜய் அரசு திரும்பக் கேட்காதா?
ஆக, தி.மு.க. அரசு கொண்டுவந்த திட்டத்தை முடக்கவேண்டும் என்ற அசல் முகத்துக்குமேல் விவசாய நலன், அது இதுவென எத்தனை முகமூடி போட்டாலும், கோரைப்பல் நீட்டிக்கொண்டிருக்கும் அசல் முகம் மட்டும்தான் மக்கள் முன் வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதே நிஜம்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)