Crime, law and justice
மருமகள் உடைத்தால் பொன்குடமா?

பொ.ஜெயராஜ், பாம்பனார், இடுக்கி மாவட்டம், கேரளாவில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்துள்ளது ஒரு விபத்து; அவர்களுக்கு கொள்கை என்று எதுவும் கிடையாது. ஆட்சிக்கு வந்ததும், 28,000 கோடி ரூபாய் கடன் வாங்கியது தான், த.வெ.க., அரசின் சாதனை. மேலும், 1.25 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கினால்தான் ஆட்சியே நடத்த முடியும். இந்த கடன் முழுதும் தமிழக மக்கள் தலையில் தான் விழும்' என்று கூறியுள்ளார், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி.
தற்போது தி.மு.க., - எம்.எல்.ஏ.,வாக இருக்கும் முன்னாள் அ.தி.மு.க., முதல்வர் பன்னீர்செல்வம் மூன்று முறை முதல்வர் ஆனதும், பழனிசாமி முதல்வர் ஆனதும் வேண்டுமானால் விபத்து எனலாம். காரணம், மக்கள் ஓட்டு போட்டு இவர்களை முதல்வராக தேர்ந்தெடுக்கவில்லை.
ஆனால், 2026 சட்டசபை தேர்தலில், த.வெ.க., தனித்துப் போட்டியிட்டு, 37 சதவீத ஓட்டுகளை பெற்றுத்தான், ஆட்சியமைத்துள்ளது.
எனவே, த.வெ.க., ஆட்சி விபத்து அல்ல; அது மக்களின் தீர்ப்பு!
அதேபோல், தமிழகத்தின் இன்றைய கடன், 11 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இக்கடனுக்கான வட்டி மட்டும் ஆண்டிற்கு, 78,686 கோடி ரூபாய் செலுத்த வேண்டிய அவல நிலையில் உள்ளது தமிழகத்தின் நிதிநிலை. இதற்கு காரணம், 60 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆட்சிகள் தான் காரணமே தவிர, வெறும், நான்கு மாத, த.வெ.க., ஆட்சி அல்ல!
அரசு வாங்கும் கடன் சுமை மக்கள் தலையில் தான் விழும் என்று, இன்று மக்களுக்காக வருந்தும் பழனிசாமி, தான் முதல்வராக இருந்த போது வாங்கிய மூன்று லட்சம் கோடி ரூபாய் கடனை, எவர் தலையில் இறக்கி வைத்துள்ளார்? ஒருவேளை, தனியொரு மனிதராக, தானே அக்கடன் சுமையை சுமந்து கொண்டிருக்கிறாரோ?
மாமியார் உடைத்தால் மண் குடம்; மருமகள் உடைத்தால் பொன்குடமா?
இரட்டை வேடம் வேண்டாம்!
எஸ்.கல்யாணசுந்தரம், சிவகாசி, விருதுநகர் மாவட்டத்தில் இருந்து எழுதுகிறார்:
சட்டசபையில், தி.மு.க., எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, மறைந்த முன்னாள் முதல்வரும், அவரது தாத்தாவுமான கருணாநிதி, தந்தை ஸ்டாலின் வழியில் அடியொற்றி, தமிழர்கள் மீது பாசமழை பொழிந்து, தன் தமிழர் பற்றை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார்.
கர்நாடக எல்லையில் அந்தோணிசாமி, ஜான் ரோஸ்பீட்டர் மற்றும் குமார் ஆகிய மூன்று தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து கொதித்தெழுந்துள்ளார், உதயநிதி.
கடந்த ஆட்சியில், இவரது தந்தை ஸ்டாலின் முதல்வராகவும், இவர் துணை முதல்வராகவும் இருந்த போது தானே, சிவகங்கை மாவட்டம், மானாமதுரையைச் சேர்ந்த ஆகாஷ் டெலிஷன் என்ற பட்டதாரி மாணவர், ஆறு பேர் கொண்ட காவல் துறையினரால் சித்ரவதை செய்து கொல்லப்பட்டார்?
போதைப்பொருள், கள்ளச்சாராயம் போன்ற சட்டவிரோத செயலை கண்டித்து, தடுத்து நிறுத்தியதால், காவல் துறையில் உள்ள சில கருப்பாடுகளுக்கு மாமூல் செல்வதில் இடையூறு ஏற்படுவதாக போதை கும்பல் போட்டுக் கொடுத்ததால் தானே, இந்த படுகொலையை அரங்கேற்றினர்.
அப்போது உதயநிதியும், நீதிபரிபாலனத்தில் இந்தியாவிற்கே முன்னோடியாக விளங்கிய இவரது தந்தையும் எடுத்த நடவடிக்கை என்ன?
நுாறு நாட்களுக்கு மேல் இறந்த உடலை பெற மறுத்து, 'எங்கள் மகனை படுகொலை செய்த கொலைகாரர்களை கைது செய்து, நீதியின் முன் நிறுத்தி, தண்டனை வழங்க வேண்டும்' என்று அந்த பெற்றோர் கதறினரே... அது, உதயநிதியின் காதில் விழவில்லையோ?
இன்று, கர்நாடக போலீசாரின் துப்பாக்கி சூட்டில் பலியான மூவரின் உயிர்களுக்காக இவ்வளவு பரிதவிக்கும் உதயநிதி, ஆகாஷ் டெலிஷனுக்காக ஏன் துடிக்கவில்லை?
அடுத்த மாநிலத்தவரால் தமிழர்கள் கொல்லப்பட்டால், உதயநிதிக்கு தமிழர்கள் மீதான பாசம் பொங்கி எழும்; ஆனால், உங்கள் ஆட்சியில் இதுபோன்ற அவலங்கள் அரங்கேறினால், கண்ணும்,காதும், தன் செயல்பாட்டை இழந்து விடுமா?
தி.மு.க., தலைமையின் தமிழ்ப்பற்று வேஷம் எப்போதோ கலைந்து விட்டது; அதனால், இனியும் வேண்டாம் இரட்டை வேடம்!
கணக்கெடுப்பு பணிக்கு இளையோரை பயன்படுத்தலாமே!
கே.சிவகுமார், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நான், மதுரை திருப்பரங்குன்றம், திருநகர் அருகில் உள்ள சவுபாக்யா நகரில் குடியிருக்கிறேன். மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக, வீடுகள் மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பு ஆக., 31ம் தேதியுடன் முடிவுற்றது.
ஆனால், இதுவரை எந்த ஓர் அலுவலரும் எங்கள் பகுதிக்கு கணக்கெடுப்புக்கு வரவில்லை. விசாரித்த வரை, எங்கள் ஏரியாவுக்கே எவரும் கணக்கெடுக்க வரவில்லை என்பது தெரிந்தது.
இந்த மாதிரி பணிகளுக்கு, அரசு ஊழியர்களையே ஏன் நம்ப வேண்டும். அவர்களுக்கான வேலையும் ஒழுங்காக நடக்காமல், இடையில் கொடுக்கப்படும் இதுபோன்ற வேலையையும் முறையாக பார்க்க முடியாமல், கடைசியில் அரசுக்கு தான் இழப்பு!
இதை தவிர்க்க, கல்லுாரி மாணவ - மாணவியரையும், வேலையில்லாத பட்டதாரிகளையும் இதில் ஈடுபடுத்தி இருக்கலாம்!
இதே பணத்தை அவர்களுக்கு சம்பளமாக கொடுத்திருந்தால், அவர்கள் சந்தோஷத்துடனும், உற்சாகத்துடனும் வேலை செய்திருப்பர்; அரசு கொடுக்கும் பணம் அவர்களுக்கு பெரும் உதவியாகவும் இருந்திருக்கும்.
இனியாவது, மத்திய - மாநில அரசுகள் மற்றும் தேர்தல் கமிஷன் இதுபோன்ற கணக்கெடுப்பு பணிகளுக்கு, கல்லுாரி மாணவ - மாணவியரையும், வேலையில்லாத பட்டதாரிகளையும் பயன்படுத்த வேணடும்!
தலைவருக்கு அடங்காத தொண்டர்கள்! ஆர்.சேஷாத்திரி, சென்னையில் இருந்து எழுதுகிறார்: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்துார்பேட்டையில், சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநாடு நடந்தது.
ஒரே கூச்சல், குழப்பம்; போக்குவரத்து நெரிசல், ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என, 'அடங்க மறு; அத்துமீறு' எனும் விதமாக மாநாடு இருந்தது.
இந்த, 'அடங்க மறு' கூட்டம், அவர்களின் தலைவரான திருமாவளவனின் பேச்சுக்கே அடங்க மறுத்தது தான், இம்மாநாட்டின் ைஹலைட்!
கடந்த ஆட்சியில், 'எனக்கு முதல்வர் ஆகும் தகுதி இல்லையா?' என்று கேட்டு, புலம்பிக் கொண்டிருந்தார், திருமாவளவன்.
இப்போது அவரது கேள்விக்கு பதில் அவருக்கே புரிந்திருக்கும்!
தன் கட்சி தொண்டர்களையே கட்டுப்படுத்த முடியாத தன்னால், ஒரு மாநிலத்தை ஆள முடியுமா என்பது!