Lifestyle and human interest
கரகம், விளையாட்டு, ஓவியம்... சாதனை மேல் சாதனை!
‘‘சின்ன வயசுல இருந்தே படங்கள் வரையறதுல ஆர்வம் உண்டு. பல ஓவியப் போட்டிகள்ல கலந்துக்கிட்டு பரிசுகள் வாங்கியிருக்கா.

மாற்றுத்திறனாளி மகள், தலையெழுத்தை மாற்றிய தாய்!
கிருஷ்ணவேணியின் கதையைக் கேட்டால், ‘இயற்கையின் மொழிகள் புரிந்துவிடின் மனிதருக்கு மொழியே தேவையில்லை’ என்ற பாடல் மனதுக்குள் ஒலிக்கும்.
உடல்ரீதியான சவால்கள் சாதிப்பதற்கு ஒருபோதும் தடையாக இல்லை என்பதற் கான மற்றோர் உதாரணமாக இருக்கிறார் கிருஷ்ணவேணி. அரியலூர் மாவட்டம் பெரியதிருகோணம் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி. பிறவியிலேயே காது கேளாமை மற்றும் பேசுவதில் சிரமம் இருந்தாலும், அதைத் தனது வாழ்க்கைக்குத் தடையாக கிருஷ்ணவேணி ஒருபோதும் நினைத்ததில்லை. அதற்கு மிக முக்கியக் காரணம் அவரின் அம்மா மாலா.
“பாட்டு போடும்போது எல்லாரும் அதைக் கேட்டு ஆடுவாங்க. ஆனா, என் மகளுக்குப் அந்தப் பாட்டே கேட்காது. அதனால ஆரம்பத்துல நடனம் கத்துக்கறது ரொம்பவே கஷ்டமா இருந்துச்சு. ஆனா, அவளுக்கு நடனத்துல இருந்த ஆர்வத்தை மட்டும் என்னால நிறுத்த முடியல...”
‘‘மியூசிக்குக்கு ஏத்த மாதிரி நானே டான்ஸ் ஆடி, சைகைகளால ஸ்டெப்ஸ் சொல்லிக் கொடுப்பேன். என்னைப் பார்த்துப் பார்த்து வீட்டுலயே பயிற்சி பண்ணுவா. பள்ளி, கல்லூரி நிகழ்ச்சிகள்ல கிருஷ்ணவேணி கலந்துக்கும்போதும் மேடைக்கு எதிர்ல உட்கார்ந்து இசையோட தாளத்துக்கு ஏற்ப சைகைகள் செய்வேன். அதைப் பார்த்தபடியே கிருஷ்ணவேணி டான்ஸ் ஆடுவா. அப்படித்தான் இப்போ நடனமாடுறது அவளுக்கு எளிதான கலையாவே மாறிடுச்சு’’ என்கிறார்.
நாட்டுப்புறக் கலைகளில் ஒன்றான கரகாட்டம் மேல் தனி ஆர்வம் உண்டாம் கிருஷ்ணவேணிக்கு.
“கரகாட்டம் அவளுக்கு ரொம்ப பிடிக்கும். தொடர்ந்து பயிற்சி எடுத்து, 2021-ம் வருஷம் வித்தியாசமான சாதனையைச் செஞ்சா. தலையில கரகத்தை வைச்சு, டான்ஸ் ஆடினபடியே ஒரு மணி நேரம் தொடர்ச்சியா வயல்ல நாற்று நட்டதைப் பார்த்து நாங்கள்லாம் ஆச்சர்யப்பட்டோம். இந்தச் சாதனை `இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்'ல அங்கீகாரத்தையும் கொடுத்திருக்கு’’ என்கிறார் மாலா. விளையாட்டிலும் கிருஷ்ணவேணிக்கு ஆர்வம் அதிகமாம்.
‘‘ஒரு நாள் ஸ்கூல்ல ஸ்போர்ட்ஸ் டே நடந்துச்சு. அங்க பிள்ளைங்க எல்லாம் விளையாடிட்டு இருந்தாங்க. அப்போ அங்க இருந்த ஆசிரியர்கிட்ட என் மகளைப் பற்றி சொன்னேன். ‘அவளுக்கு நல்லா விளையாடத் தெரியும்’ன்னு சொன்னேன். ஆசிரியர்கள், நான் சொல்றதைக் கேட்டு கிருஷ்ணவேணிக்கு வாய்ப்பு கொடுத்தாங்க. மைதானத்துல அவ விளையாடினதைப் பார்த்த பிறகுதான், அவளுக்குள்ள இருந்த திறமையை ஆசிரியர்களே புரிஞ்சுக்கிட்டாங்க. அதுக்கப்புறம் எல்லாப் போட்டிகளுக்கும் கூட்டிட்டுப் போக ஆரம்பிச்சாங்க” என்கிறார். அந்த வாய்ப்புக்குப் பிறகு கிருஷ்ணவேணியின் விளையாட்டுப் பயணம் வேக மெடுத்துள்ளது.
‘‘குண்டு எறிதல், தட்டு எறிதல் போட்டிகள்ல கவனம் செலுத்தி, மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவுல பல போட்டிகளுக்குப் போயிருக்கா. பல போட்டிகள்ல பதக்கங்களையும் ஜெயிச்சிருக்கா. பாரதிதாசன் பல்கலைக்கழகப் போட்டிகள்லயும் தொடர்ந்து ரெண்டு வருஷமா முதலமைச்சர் கோப்பை போட்டிகள்ல கலந்துகிட்டு ஜெயிச்சிருக்கா. தினமும் காலைல மூணு மணி நேரம், சாயங்காலம் மூணு மணி நேரம்னு ஆறு மணி நேரம் பயிற்சி எடுத்துட்டிருக்கா. கடினமான இந்த உழைப்புதான் அவளுக்குத் தொடர்ச்சியான வெற்றிகளையும் கொடுக்குது’’ என்கிற மாலா, கிருஷ்ணவேணியின் ஓவிய ஆர்வம் பற்றியும் சிலாகிக்கிறார்.
‘‘சின்ன வயசுல இருந்தே படங்கள் வரையறதுல ஆர்வம் உண்டு. பல ஓவியப் போட்டிகள்ல கலந்துக்கிட்டு பரிசுகள் வாங்கியிருக்கா. மாநில அளவு போட்டில கலந்துக்கிட்டு மூணாவது பரிசும் வாங்கியிருக்கா. சுற்றுச்சூழல் மேலயும் அவளுக்கு ஆர்வம் உண்டு. வயல்ல கரகாட்டம் ஆடினதே விவசாயத் தொழில் பத்தி உலகத்துக்கு எடுத்துச் சொல்லணும்ங்கற நோக்கம்தான். விதைகள் சேகரிக்கறது, மரங்கள் நடுறதுன்னு அவளோட செயல்பாடுகள் ஆச்சர்யத்தைக் கொடுக்கும்.
இந்தியாவுக்காக சர்வதேச அளவிலான போட்டிகள்ல பங்கேற்கணும்னு அவளுக்கு ஆசை இருக்கு. மாற்றுத்திறனாளி களுக்கு உதவணும்ங்கிற பெரிய கனவும் மனசும் இருக்கு. அதெல்லாம் நடந்தா சந்தோஷம்’’ என்கிறார் மனம் நிறைய எதிர் பார்ப்புகளுடன்.
எண்ணங்கள் ஈடேறட்டும்!
