Arts, culture, entertainment and media
சாலமன் பாப்பையா உடலுக்கு அரசு மரியாதை - அமைச்சர் நிர்மல் குமார் அறிவிப்பு!

சாலமன் பாப்பையா உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அமைச்சர் நிர்மல் குமார் இதனை உறுதிப்படுத்தினார்.
மறைந்த சாலமன் பாப்பையாவுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே சாத்தங்குடியில் எளிய குடும்பத்தில் பிறந்த சாலமன் பாப்பையா, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பட்டிமன்ற நடுவராக பட்டிதொட்டியெங்கும் புகழ்பெற்ற சாலமன் பாப்பையா, சிரிக்க வைப்பதுடன் சிந்திக்கவும் வைக்கும் பட்டிமன்றங்களால் மக்களின் பேரன்பைப் பெற்றார்.
எழுத்தாளர், பட்டிமன்றப் பேச்சாளர், நடுவர், பதிப்பாசிரியர், நடிகர் என பன்முகம் கொண்டவராக சாலமன் பாப்பையா திகழ்ந்தார். மதுரை ஞானஒளிவுபுரத்தில் வசித்து வந்த சாலமன் பாப்பையா, வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நலக்குறைவால், மதுரை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி தனது 91-ஆவது வயதில் சாலமன் பாப்பையா காலமானார். தமிழ்ப்புலமையால் உலகத் தமிழர்களின் உள்ளம் கவர்ந்த சாலமன் பாப்பையாவின் மறைவு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்களின் அஞ்சலிக்காக மதுரை ஞானஒளிவுபுரத்தில் உள்ள இல்லத்தில் சாலமன் பாப்பையாவின் உடல் வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஊடகங்களிடம் பேசிய சாலமன் பாப்பையாவின் உதவியாளர் ராஜா, பாப்பையாவின் கடைசி நிமிடங்கள் குறித்து விவரித்தார். தொடர்ந்து பேசிய அவர், சாலமன் பாப்பையாவின் விருப்பப்படி அவரது உடல் தகனம் செய்யப்பட இருப்பதாகக் கூறினார். பாரதியார் குறித்து எழுதிய புத்தகத்தை வெளியிட வேண்டும் என்ற கடைசி ஆசை நிறைவேறாமலேயே பேராசிரியர் சாலமன் பாப்பையா மறைந்துவிட்டதாகவும், உதவியாளர் ராஜா கண்ணீருடன் குறிப்பிட்டார்.
இதற்கிடையே, சாலமன் பாப்பையா உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழறிஞர்கள் கோரிக்கையை ஏற்று இந்த அறிவிப்பை அமைச்சர் நிர்மல் குமார் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "தமிழறிஞர் அய்யா சாலமன் பாப்பையா அவர்களுக்கு அரசு மரியாதை" என்று குறிப்பிட்டுள்ளார்.
