Politics
BRICS | 7 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா வரும் சீன அதிபர்.. பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!

18வது பிரிக்ஸ் மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ளது. இதற்காக உலக தலைவர்கள் பலரும் நாளை டெல்லி வர உள்ளனர்.
2019-க்குப் பிறகு சீன அதிபர் ஜி ஜின் பிங் இந்தியா வருகை தர உள்ளார். அவருடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
18-வது பிரிக்ஸ் மாநாட்டை இந்தியா நடத்துகிறது. டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய இரண்டு நாட்கள் இந்த மாநாடு நடைபெற உள்ளது. இதில் உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் கலந்துகொள்ள உள்ளனர். இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதிகரித்து வரும் வர்த்தக பதற்றம், புவிசார் அரசியலின் நிலைத்தன்மையின்மை ஆகியவற்றுக்கு இடையே உலகின் தென் பகுதியை ஒன்றிணைக்கும் வகையில், இந்த மாநாடு நடத்தப்பட உள்ளது. நாளை டெல்லியில் நடைபெற உள்ள இந்த மாநாட்டில், சீன அதிபர் ஜி ஜின்பிங், ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா, இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ, எகிப்திய அதிபர் அப்தெல் ஃபத்தா எல்-சிசி உள்ளிட்ட பலர் கலந்துகொள்கின்றனர்.
இந்த மாநாட்டில் கலந்துகொள்ள 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வருகை தர இருக்கும் சீன அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி இரு நாட்டு உறவுகளை மேம்படுத்தும் வகையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடைசியாக சீன அதிபர் ஜீ ஜின் பிங், 2019 அக்டோபரில் தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தில் நடைபெற்ற 2nd India-China Informal Summit மாநாட்டிற்கு வருகை தந்தார்.
அதன் பிறகு தற்போது வருகை தர இருக்கிறார். 2020ல் கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற மோதலில் இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்துக்குப் பிறகு சீன அதிபருடன் பிரதமர் மோடி சந்திக்க இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. சனிக்கிழமை பிற்பகல் சீன அதிபர் டெல்லி வருகை தருகிறார். அன்றைய தினமே இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
