வீடுகளில் சோலார் பேனல் அமைக்க கடன் பெறுவதில் அலைக்கழிப்பு: அறிவிப்பு வரவில்லை என கைவிரிக்கும் வங்கிகள்

வத்தலக்குண்டு:வீடுகளில் சோலார் பேனல் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசின் மாற்று எரிசக்தி துறை முன்னெடுத்துள்ள நிலையில் அதற்கான கடனுதவி கேட்டு பொதுமக்கள் செல்லும் போது முறையான அறிவிப்பு வரவில்லை என வங்கிகள் அலைக்கழிப்பதாக புகார் எழுந்துள்ளது.
மின்சார பயன்பாடு அதிகரித்து வருவதாலும், வெப்ப அலை நீடித்து ஆண்டுக்கு ஆண்டு மின் நுகர்வோர் அதிகரித்து வருவதாலும், மாற்று வழியை கண்டறிய வேண்டும் என பல ஆண்டுகளாகவே மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.
இயற்கையிலேயே கிடைக்கும் சூரிய ஒளியை பயன்படுத்தி சூரிய ஒளி மின்சாரம் தயாரிப்பில் ஈடுபடுபவருக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது.
பெரிய அளவிலான திட்டங்களுக்கு மானியம் வழங்கி வந்த நிலையில் தற்போது 'பிரதம மந்திரி சூர்யாகர்' திட்டத்தின் கீழ் வீடுகளிலும் சோலார் பேனர் அமைத்து மின்சாரத்தை தயாரித்து, பயன்படுத்தி கொள்ள அறிவுறுத்தி வருகிறது.
இத்திட்டத்தில் பெருவாரியாக அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் 3 மெகா வாட்டிற்கு ரூ.78 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் இதற்காக எவ்வித முன்னெடுப்பும் தமிழக அரசு எடுக்கவில்லை.
புதிதாக அமைந்த த.வெ.க. அரசு மத்திய அரசு வழங்கும் ரூ.78 ஆயிரத்துடன் கூடுதலாக ரூ. 22 ஆயிரம் சேர்த்து ரூ.1 லட்சம் மானியமாக வழங்கப்படும். இதற்கு வங்கிகளில் கடன் பெற்று வீடுகளில் சோலார் பேனர்களை அமைத்து கொள்ளலாம் என அறிவித்தது.
தற்போது மின் கட்டணம் அதிகரித்து கொண்டே செல்கிறது. வெயில் காலமும் முன்பிருந்ததை விட அதிக நாட்களுக்கு நீடிக்கிறது. வெப்பமும் அதிக அளவு இருப்பதால் மின் நுகர்வு அதிகரித்து மின் கட்டணம் மாதாந்திர பட்ஜெட்டில் பெரிய தொகையை எடுத்துக் கொள்கிறது.
இதை கணக்கில் கொண்டு வீடுகளில் சோலார் பேனர் அமைப்பதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். சில அரசு ஊழியர்களும், அலுவலர்களும் சோலார் அமைப்புகள் நிறுவ கடனுதவி கேட்டு வங்கிகளை நாடுகின்றனர்.
ஆனால் வங்கி அதிகாரிகள் இதுகுறித்த எவ்வித அறிவிப்பும் தங்களுக்கு இல்லை. நாங்கள் ஒன்று செய்ய முடியாது என கைவிரிப்பதால் மக்கள் அலைக்கழிக்கப்படும் நிலை உள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம் வீடுகளில் சோலார் பேனல் அமைக்க கடனுதவி வழங்க வங்கிகளுக்கு உத்தரவிட வேண்டும். வங்கி உயர் அதிகாரிகளும் அதாவது மண்டல, மாநில அதிகாரிகள் சோலார் பேனல்கள் அமைக்க கடன் தருவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என கிராமப்புற வங்கிகளுக்கு உத்தரவிட வேண்டும்.