Politics
“மத்திய, மாநில அரசுகள் ஒருபோதும் அனுமதி வழங்கக் கூடாது” - டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல்!

மயிலாடுதுறை மாவட்டத்தை ஒட்டிய கடற்பகுதியில் புதிய எண்ணெய் கிணறுகளை அமைக்க தனியார் நிறுவனம் முயற்சி செய்கிறது. இதனால் கடல்வளத்தையும், மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கும் இத்திட்டத்திற்கு மத்திய, மாநில அரசுகள் ஒருபோதும் அனுமதி வழங்கக் கூடாது என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மயிலாடுதுறை மாவட்டத்தை ஒட்டிய வங்கக் கடல் பகுதியில் புதிதாக 5 எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறுகளை அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி தனியார் நிறுவனம் மத்திய அரசிடம் விண்ணப்பித்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
கடலோரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரத்தைத் தாங்கி நிற்கும் இயற்கை வளம் நிறைந்த கடல் பகுதிகளில் ஏற்கனவே செயல்பட்டு வரும் எண்ணெய் கிணறுகளால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கே இதுவரை உரிய தீர்வு கிடைக்காத நிலையில், தற்போது கூடுதலாக எண்ணெய் கிணறுகளை அமைக்க முயற்சிப்பது மீனவ மக்களின் பொருளாதாரத்தையும், வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கும் சூழலை உருவாக்கக்கூடும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். காவிரி டெல்டா மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகள் ஏற்கனவே பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதிகளில் செயல்படுத்த முடியாத எண்ணெய் கிணறு அமைக்கும் திட்டங்களை அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் செயல்படுத்த முயற்சிக்கும் தனியார் நிறுவனங்களின் நடவடிக்கைகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
எனவே, கடல் வளத்தையும், மீன்வளத்தையும், மீனவ சமுதாய மக்களின் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கும் வகையில் எண்ணெய் கிணறுகளை அமைக்கக் கோரி அளிக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை ஆரம்ப நிலையிலேயே நிராகரிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துவதோடு இத்திட்டத்திற்கு தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின் பரிந்துரை உள்ளிட்ட எவ்வித அனுமதிகளையும் மாநில அரசு வழங்கக் கூடாது என்றும் வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)