உயர்கோபுர மின்விளக்குக்கு மின் இணைப்பு வழங்கல்
பள்ளிப்பட்டு: கூட்டு சாலையில் அமைக்கப்பட்ட உயர்கோபுர மின்விளக்குக்கு நேற்று மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
பள்ளிப்பட்டில் இருந்து பொதட்டூர்பேட்டை செல்லும் கூட்டுச்சாலையில், பள்ளிப்பட்டு நீதிமன்ற வளாகம், தீயணைப்பு நிலையம், வனத்துறை அலுவலகம், வேளாண் விரிவாக்க மையம், உணவு பொருள் பாதுகாப்பு கிடங்கு உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.
இதனால், இந்த கூட்டுச்சாலை பகுதி, தற்போது வேகமாக வளர்ந்து வருகிறது. வாகனங்களின் போக்குவரத்தும் அதிகரித்துள்ளது. இப்பகுதியில் சாலை பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது.
இந்த உயர்கோபுர மின்விளக்கு கம்பத்திற்கு, நேற்று மின் இணைப்பு வழங்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதேபோல, இதே கூட்டுச்சாலையில் இருந்து சோளிங்கர் செல்லும் சாலையில், நாதன்குளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உயர்கோபுர மின்விளக்கு கம்பம், நான்கு மாதங்களாக மின் இணைப்பு வழங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதை விரைந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.