Politics
இது கே.பி.யின் கலைப்பயணம்! -புஷ்பா கந்தசுவாமி (18)

நாகேஷ் இந்தப் பெயரை எழுதிய தாள்கூட சிரிக்கும். இது மிகையல்ல, நகைச்சுவைக்கென்றே திரையுலகத்தில் மிகவும் ரசிக்கப்பட்ட, வரவேற்கப்பட்ட ஒரு ஆளுமை நாகேஷ் அவர்கள். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., நடிகர் திலகம் சிவாஜி காலம் முதல் சிம்பு தனுஷ் காலம் வரை திரைத் துறையில் பலப்பல வேடங்களில் ஆட்சி செலுத்தியவர். இவருக்கும் அப்பாவுக்கும் உண்டான தொடர்பு ஒரு கதை. "மேஜர் சந்திரகாந்த்' நாடகத்தின் வெற்றிக்குப் பிறகு நாகேஷ் எப்படியாவது கே.பி.யுடன் சேர்ந்து பணி செய்ய விரும்பினார். அப்போதே அவர் பிரபல மான நகைச்சுவை நடிகர்தான், இருந்தாலும் நாடகம் அவரை ஈர்த்தது.
நாகேஷ் ரயில்வேயிலும் அப்பா ஏ.ஜி.எஸ். அலுவலகத்திலும் பணிபுரிந்த காலம் அது. உண்மையை சொல்வதென்றால் "நாங்கள் இருவருமே நாடகப் பைத்தியங்கள்' என்று அப்பா சொல்லுவார். நாடக மேடை என்பதும் அன்று ஒரு நடிப்புப் பள்ளியாக, கல்லூரியாகத் திகழ்ந்த மிகுந்த மதிப்புக்குரிய காலகட்டம் அது. அதுதான் இன்று காலத்தால் பதியம் போடப்பட்டு தொலைக்காட்சி நாடகம் என்று சினிமாவின் சிறப்பான அம்சங்களையும் தன்னுள் வாங்கிக் கொண்டு சக்கை போடு போட்டுக்கொண்டி ருக்கிறது.
அப்படியொரு காலகட்டத்தில் அப்பாவுடன் அவர் இணைந்ததும் அப்பா அவரை இணைத்துக் கொண்டதும், காலம் ஒருவருக்கொருவர் வழங்கிக்கொண்ட பரிசு என்றுதான் கூறுவேன்.
மேஜர் சந்திரகாந்த் நாடகம் சக்கை போடு போட்ட நாளில் நாகேஷ் எங்கே இருந்தாலும் வந்துவிடுவார். அவரை அந்த நாடகம் பெரிதும் பாதித்திருந்தது. நாடகத்தில் அவருக்கு வேஷம் இல்லை. தனக்கு வேடமில்லாத ஆதங்கம் அவரிடம் இருந்தது. ஏனென்றால் அப்பாவும் நாகேஷும் பல நாடகங்களில் ஒன்றாக நடித்தவர் கள். அதில் உயிர் உள்ளவரையும் என்னும் நாடகத்தை எப்போதும் அப்பாவால் மறக்க முடியாது. அதில்தான் அப்பாவாக நடித்திருந்தார், நாகேஷ் வேலைக்காரனாக நடித்திருந்தார். பின்னர் அப்பாவே கதை எழுதி இயக்குனராகவும் நாடகங்களை போட்டார், இது ஒரு வளர்ச்சி நிலை. இந்த நிலையிலும் நாகேஷ், அப்பாவோடு இணைந்து செயல்பட விரும்பினார். அதுதான் அவரது ஆதங்கத்திற்கு காரணமாக இருக்க முடியும்.
அப்போது நாகேஷ் சினிமாவிலும் பரவலாக நடித்துக்கொண்டிருந்த நேரம். "மேஜர் சந்திரகாந்த்' நாடகத்தில் ஒரு காட்சி "சார் பேப்பர்' என்று ஒரு வரி மட்டும் பேசி பேப்பரை விட்டெறிந்து செல்லும் காட்சி. அதே வேடத்தில் அப்பாவும் ஒரு முறை நடித்திருக்கிறார். இந்த வேடமாவது நான் செய்கிறேன் என்று ஒரு முறை பேப்பர் போடும் காட்சியில் நாடகத்தில் நடித்தார். நாகேஷ் ஒரு நிமிடமே மேடையில் தோன்றினும் கைதட்டல் பல நிமிடங்கள் நீடித்தது. இந்தச் சம்பவம் அப்பாவை யோசிக்க வைத்தது. ஒரு மிகச்சிறிய காட்சிதானே என்று அவர் நினைக்காதது அப்பாவுக்கு ஆச்சரியமளித்தது. அந்த காட்சியில் அவருக்கு கிடைத்த வரவேற்பு மற்றும் அவருக்குள்ள ஈடுபாடு, அக்கறை இவைகளை எல்லாம் உத்தேசித்து நாகேஷுக்கென்றே பிரத்தியேகமாக கதையமைத்து அவரது ஆற்றலை வெளிப்படுத்த அப்பா முடிவு செய்தார். அதுதான் "சர்வர் சுந்தரம்.'
முதலாளி மகள் கே.ஆர்.விஜயா தன்னை காதலிப்பதாக நினைத்துக்கொண்டு நடிகனாகி விட்ட நிலையில் காதலை சொல்ல பூங்கொத்துடன் வருவார். கே.ஆர்.விஜயா அவரைக் காதலிக்க வில்லை என்பார். அதை சிரமப்பட்டு ஜீரணிக்கும் நாகேஷ், "பூங்கொத்தைத் திரும்ப எடுத்துச்சென் றால் ரசிகர்கள் தவறாக நினைப்பார்கள், எனவே இங்கேயே இருக்கட்டும்' என்று கூறிவிட்டு, அங்கி ருக்கும் குப்பைக்கூடையை எடுத்துக்கொள்வார். ஏனென்றால் அதில் பூங்கொத்தை கே.ஆர்.விஜயா போட்டுவிட்டால் என்னாவது.
இந்தக் காட்சியை பத்திரிகைகளும் பாராட்டின. ஒரு நகைச்சுவை நடிகர் குணச்சித்திர வேடத்திலும் கலங்கடிக்கச் செய்யமுடியும் என்பது நிரூபணமானது. அதன்பிறகு நாகேஷ் கே.பி. கூட்டணிக்கு பொற்காலம். "நீர்க்குமிழி', "நவகிரகம்', "மேஜர் சந்திரகாந்த்', "பாமா விஜயம்', "எதிர் நீச்சல்', "அனுபவி ராஜா அனுபவி', "தாமரை நெஞ்சம்', "பூவா தலையா', "பத்தாம்பசலி' "புன்னகை' என்று நீண்ட பட்டியல் உண்டு. "முத்துக் குளிக்க வாரீகளா' என்ற டூயட் பாடலை இன்றுவரை பட்டிதொட்டியில் கேட்கலாம் .
நாகேஷின் தனித்தன்மை காமெடி டைமிங். கூடவே எதிர்பார்க்காத பஞ்ச். மற்றவர்களுக்கு எப்படியோ, அப்பா நாடகங்களில் கொடுத்த வசனங்களைத் தவிர, வேறு எதையும் பேசமாட் டார் நாகேஷ். ஆனால் "உயிருள்ளளவும்' என்ற நாடகத்தில் கதாநாயகி மயக்கமடையும் காட்சி. தண்ணி, தண்ணி என்று கதாநாயகி தந்தையான அப்பா கத்துவார். வேலைக்காரன் நாகேஷ் "கார்ப்ப ரேஷனுக்கு போன் பண்ணி யிருக்கிறேன். இனிமே வந்தாதான் உண்டு' என்று பதில் தந்துவிடுவார். அப்போது தண்ணீர் பஞ்சம் இருந்ததை அறிந்த எல்லோரும் சிரித்து விட்டனர். ஆனால் இந்த மாதிரி சமயோசித காமெடியால், கதை போக்கும், பாத்திரங்களின் மனநிலையும் மாறிவிடும்' என்று அப்பா கண்டிப்பார். "என் நாடகத்தில் என்னை மீறி ஒரு வார்த்தை பேசக்கூடாது' என்பார். அதன்படியே ஒத்து ழைப்பு தந்து உன்னதமான நிலையை அடைந்தார் நாகேஷ்.
"சர்வர் சுந்தரம்' வெற்றியைத் தொடர்ந்து நாகேஷ் ஒரு புதிய கார் வாங்கி இருந்தார். டாப்லெஸ் கார் அது. அதில் அப்பாவை உட்கார வைத்து டாக்டர் ராதாகிருஷ்ணன் (அப்போது "எட்வர்ட் எலியட்ஸ் சாலை என்று பெயர்) ஒரு வலம் வந்தார். பின்பு அப்படியே ஆர்.ஆர்.சபாவுக்கு அவர்கள் செல்ல முடிவு செய்தனர். அசுர வேகத்தில் கார் ஓட்டுவது நாகேஷுக்கு இயல்பு, அன்றும் கார் பறக்கிறது. அப்பாவுக்கு பயமாகிவிட்டது. "நாகேஷ் மெல்லப் போ எதற்கு இத்தனை வேகம். நாம் ஆர்.ஆர். சபாவுக்கு போக வேண்டும், ஆஸ்பத்திரிக்கு அல்ல; என்றார் அப்பா. அதைக் கேட்டு சிரித்த நாகேஷ். "எதிர்காலத்தில் ஒரு மிகப்பெரிய இயக்குனராக வரப்போகும், ஒரு சிந்தனையாளர் என் அருகில் உட்கார்ந்திருக்கிறார். அப்படியெல்லாம் வேகமாக ஓட்டி ஆஸ்பத்திரிக்கு போகவிடமாட்டேன். எனக்கும் பொறுப்பு இருக்கு'' என்று அந்த நேரத்தில் அவர் சொன்னது, அப்பாவின் நினைவு வங்கியில் பத்திரமாக இருந்தது.
"சுருக்கமாக சொன்னால் எங்கள் கூட்டணியில் நான் நாகேஷ் வழியாக நடித்தேன். அவர் என் வழியாக சிந்தித்தார் என்றால் அது மிகையில்லை'' என்று அப்பா சொல்லி யிருக்கிறார்.
நாகேஷின் திருமணத்திற்கு சர்ச்சுக்கு சென்று வாழ்த்திய அப்பா, அவர் மனைவியின் மரணத்தை அறிந்து துக்கம் விசாரிக்கச் சென்றார். அப்பாவை கட்டிக்கொண்டு கதறியழுத நாகேஷை தேற்றுவது மிகச்சிரமமாக இருந்தது. என்ன செய்வது. சன் டி.வி.யில் நாகேஷ் நடித்த திரைப்படங்கள் "நாகேஷ் வாரம்' என்ற பெயரில் ஒளிபரப்பப்பட்டது அதில் ஐந்தில் நான்கு அப்பா இயக்கிய படங்கள். அதைப்பார்த்து முடித்த நிலையில் எங்கள் வீட்டிற்கு திடீர் விசிட் செய்த நாகேஷ் நெடுநேரம் வரை அப்பாவை பார்த்தபடியே உட்கார்ந்திருந்தார். பின்பு "பாலு, அந்த திரைப்படங்களை பார்த்தபோது நானும் நீயும் எந்த அளவுக்கு ஒருவருக்கொருவர் கலந்தும் இசைந்தும் செயல்பட்டிருக்கிறோம் என்பது தெரிந்தது. அந்தநாள் இனி வருமா..?'' என்று ஏக்கத்தோடு கேட்டார் நாகேஷ். அப்பாவின் நெஞ்சமும் நெகிழ்ந்து விட்டது. இருவரின் கண்களும் ஈரமானது.
அப்பாவின் முதல் காதலி நாடகம்தான், என்றாலும் அவரது வெற்றிக்குப் பின்னால் ஒரு பாலக்காட்டு பெண்மணி இருந்தார் அவர் யார்?
(சொல்கிறேன்...)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)