ப.வேலுாரில் சிறுமியின் சடலத்துடன் சாலை மறியல்

ப.வேலுார்:ப.வேலுார் தனியார் மருத்துவமனையில், கால் முறிவுக்கு முறையான சிகிச்சை அளிக்காததால் தான் சிறுமி உயிரிழந்ததாக கூறி, தேசிய நெடுஞ்சாலையில் சிறுமியின் சடலத்தை வைத்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
ப.வேலுார் அருகே, பொய்யேரியை சேர்ந்தவர் கண்ணன், 45; சில்லி சிக்கன் கடை வைத்துள்ளார். இவரது மனைவி காவ்யா, 40; தம்பதிக்கு காவிஷ்கா, 7, ரித்திக்ஷா, 5, என, இரண்டு பெண் குழந்தைகள். குப்பிச்சிபாளையம் அரசு நடுநிலை பள்ளியில் காவிஷ்கா, 3வது படித்து வந்தார். கடந்த ஆக., 28ல் பள்ளியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி, கீழே விழுந்து வலது காலில் காயம் ஏற்பட்டது. கடந்த, 29ல் காலில் அதிகமாக வலி ஏற்படவே, ப.வேலுார் சுல்தான் பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறி, சிறுமிக்கு காலில் மாவு கட்டு போட்டுள்ளனர்.
தொடர்ந்து, காலில் வலி அதிகமாகி, கருப்பு நிறமாக மாறியதால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், பாண்டிச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு முற்றிலும் செயலிழந்த வலது கால் அகற்றப்பட்டது. தொடர்ந்து சிகிச்சையில் இருந்த சிறுமி, நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு உயிரிழந்தார். நேற்று அதிகாலை, 5:45 மணிக்கு, சிறுமியின் சடலத்துடன் பெற்றோர் மற்றும் உறவினர்கள், ப.வேலுார் சுல்தான்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை வாசலில் சிறுமியின் சடலத்தை வைத்து, 'முறையாக சிகிச்சை அளிக்காத டாக்டரை கைது செய்ய வேண்டும்' எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டி.எஸ்.பி., வெண்ணிலா, ப.வேலுார் இன்ஸ்பெக்டர் உமா சங்கர், பரமத்தி இன்ஸ்பெக்டர் சங்கரா பாண்டியன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் அதிருப்தியடைந்த பொதுமக்கள், சிறுமியின் சடலத்தை ப.வேலுார் தேசிய நெடுஞ்சாலையில் வைத்து, நேற்று காலை, 8:30 மணிக்கு சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நாமக்கல் எஸ்.பி., யாதவ் கிரிஸ் அசோக், சாலை மறியலில் ஈடுபட்ட சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, 'சம்பந்தப்பட்ட மருத்துவமனை, சிகிச்சையளித்த டாக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என உறுதியளித்ததால், சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இந்த போராட்டத்தால், தேசிய நெடுஞ்சாலையில், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.