இரு வேறு விபத்துகள்: அசாமில் 7 பேர் பலி
தேஜ்பூர்: வடகிழக்கு மாநிலமான அசாமின் சோனித்பூர் மற்றும் பிஸ்வநாத் மாவட்டங்களில் நடந்த இரு வேறு சாலை விபத்துகளில் ஏழு பேர் உயிரிழந்தனர். சோனித்பூர் மாவட்டத்தின் பாலிபாரா பகுதியில் பெட்ரோல் பங்க் அருகே கார் மற்றும் லாரி நேருக்குநேர் மோதிய விபத்தில், ஐந்து பேர் பலியாகினர். இறந்தவர்கள் அனைவரும், காரில் பயணித்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. மற்றொரு விபத்தில், பிஸ்வநாத் மாவட்டத்தின் கச்மாரி பகுதியில் அதிவேகமாக சென்ற பைக், சாலையோரம் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், இருவர் உயிரிழந்தனர்.
குல்காம்: ஜம்மு - காஷ்மீரில், தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான, 'லஷ்கர் - இ - தொய்பா'வின் ஒருங்கிணைப்பாளர்களுக்கு உதவும் உள்ளூர் நபர்களின் 10க்கும் மேற்பட்ட இடங்களில், என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பினர் நேற்று சோதனை நடத்தினர். குப்வாரா, குல்காம், பந்திபோரா, பாரமுல்லா உள்ளிட்ட இடங்களில் நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திரிபுரா உள்ளூர் தேர்தல்:திப்ரா மோதா கட்சி வெற்றி
அகர்தலா: வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் நடந்த கிராம குழுக்களுக்கான தேர்தலில், மாநில கட்சியான திப்ரா மோதா, மொத்தம் உள்ள, 4,597 இடங்களில், 1,548 இடங்களை போட்டியின்றி வென்றுள்ளதாக மாநில தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. மாநில தேர்தல் கமிஷன் செயலர் அனுராக் சென் கூறுகையில், “கிராம குழுக்களுக்கான தேர்தலில், வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான காலக்கெடு முடிந்த பின், திப்ரா மோதா கட்சி, 1,548 இடங்களையும், பா.ஜ., 82 இடங்களையும் போட்டியின்றி வென்றுள்ளன. மீதம் உள்ள 2,967 இடங்களுக்கு வரும் 28ல் தேர்தல் நடக்கும்,'' என்றார்.
திருவனந்தபுரம்: கேரளாவைச் சேர்ந்த, 30 வயதான ராணுவ வீரர், ஹிமாச்சல் எல்லையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போது, திடீரென மூளைச்சாவு ஏற்பட்டு உயிரிழந்தார். முன்னதாக, தன் மறைவுக்கு பின், 'கேரள மாநில உறுப்பு மற்றும் திசு மாற்று அறுவை சிகிச்சை அமைப்பு'க்கு உடல் உறுப்புகளை தானம் செய்தார். அவரது உடல் உறுப்புகள் திருவனந்தபுரத்தில் இருந்து திருவல்லா வரை எடுத்துச் செல்லப்பட்டு, கொடையாளர்களுக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டன. இதன் மூலம், ஏழு பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டது.