Politics
பொது சுத்திகரிப்பு நிலையம் 20 ஆண்டு பிரச்னைக்கு த.வெ.க., தீர்வு காணுமா
பள்ளிப்பாளையம்:தி.மு.க., - அ.தி.மு.க., ஆட்சியில், பொது சுத்திகரிப்பு நிலைய திட்டம் கிடப்பில் போடப்பட்ட நிலையில், த.வெ.க., அரசாவது தீர்வு காணுமா என, குமார பாளையம், பள்ளிப்பாளையம் பகுதி சாய ஆலை உரிமையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், பள்ளிப்பாளையம் பகுதிகளில் ஏராளமான சாய ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் பெரும்பாலான சாய ஆலைகள், அரசு விதிகளை பின்பற்றாமல், சாயக்கழிவுநீரை நேரடியாக காவிரி ஆற்றில் திறந்துவிடுகின்றன. இதனால் தண்ணீர் மாசடைந்து, அதை பயன்படுத்தும் மக்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டு வருகின்றன.
குமாரபாளையம் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து, விதிமீறும் சாய ஆலைகளை கண்டறிந்து, 'சீல்' வைப்பது, மின் இணைப்பை துண்டிப்பது, அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஆனால், இதன் எதிரொலியாக, ஒரு மாதம்கூட தாக்குப்பிடிக்க முடியாத சாய ஆலை உரிமையாளர்கள், ஏதோ ஒருவழியில் மீண்டும் சாய ஆலைகளை இயக்க தொடங்கி விடுகின்றனர்.
இதற்கு முழு தீர்வு காண, அரசு சார்பில் பொது சுத்தி கரிப்பு நிலையம் அமைத்து தர வேண்டும் என, சாய ஆலை உரிமையாளர்கள், கடந்த, 20 ஆண்டுக்கும் மேலாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை ஏற்ற அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, கடந்த, 2014ல் 'பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும்' என, அறிவித்து, 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கினார். பின், இடம் தேர்வு செய்யும் பணி நடந்தது.
தொடர்ந்து, இ.பி.எஸ்., முதல்வராக பொறுப்பேற்ற பின், இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆலோசனை கூட்டம், அலுவல் உள்ளிட்ட பணிகள் நடந்தன. ஆனால், திட்டம் முழுவடிவம் பெறவில்லை. 2021ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தி.மு.க., ஆட்சிக்கு வந்தது. 2021 ஆக., 6ல், தி.மு.க., அமைச்சர்கள், பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் இடத்தை ஆய்வு செய்தனர். அதோடு சரி, இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
தற்போது, புதிதாக பொறுப்பேற்றுள்ள, த.வெ.க., அரசாவது, இந்த திட்டத்துக்கு உயிர் கொடுக்குமா என, 'இலவு காத்த கிளி போல' சாய ஆலை உரிமையாளர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர். இதற்காக, குமாரபாளையம் தொகுதியில் வெற்றி பெற்று, பால்வளத்துறை அமைச்சராக உள்ள விஜயலட்சுமியிடம், இரண்டு மாதங்களுக்கு முன்பே, சாய ஆலை உரிமையாளர்கள் கோரிக்கை மனு வழங்கினர்.
அதுமட்டுமின்றி, கடந்த ஜூலையில், சென்னையில் முதல்வர் விஜய் தலைமையில் நடந்த கலெக்டர்கள் மாநாட்டில், நாமக்கல் கலெக்டர் மதுபாலன், 'சாயக்கழிவுநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, பொது சுத்தி கரிப்பு நிலையம் அமைப்பதே தீர்வாகும்' என, தெரிவித்துள்ளார்.
இதனால், பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க தேவையான நடவடிக்கைகளை, இந்த அரசு விரைந்து எடுக்கும் என்ற நம்பிக்கையில், குமாரபாளையம், பள்ளிப் பாளையம் சாய ஆலை உரிமையாளர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.