Politics
'மக்களுக்கு ஆபத்தாக மாறும் ரீல்ஸ்?'; 52 வயது பெண்ணின் விபரீத முடிவு

சத்தீஸ்கர் மாநிலம், கோர்பா மாவட்டத்தில் உள்ள கேரகச்சார் கிராமத்தைச் சேர்ந்தவர் மங்லோ பாய் சாரதி. 52 வயதான இவர் தினமும் மொபைல் போனில் 'ரீல்ஸ்' பார்க்கும் பழக்கம் கொண்டிருந்தார். காலப்போக்கில் இவர் ரீல்ஸ் பார்ப்பதற்கு அடிமையாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், வழக்கம் போல இவர் கடந்த சனிக்கிழமை அன்று மொபைல் போனில் ரீல்ஸ் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது, சிக்னல் கிடைக்காமல் இணையச் சேவையில் ஏற்பட்ட தொடர் தடைகளால், அவரால் தொடர்ந்து ரீல்ஸ் பார்க்க முடியவில்லை. வீடியோக்களும் பாதியிலேயே நின்று விடுதால், அவர் மன உளைச்சலுக்கு ஆளானார். இந்த மன உளைச்சலால் அவர் தனது மொபைல் போனை தரையில் வீசி உடைத்துள்ளார். பின்பு, மன அழுத்தம் காரணமாகத் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்துள்ளார்.
அதன்படி, அவர் வீட்டிலிருந்த பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளார். இதையடுத்து, அவரது உடல்நிலை மோசமாவதைக் கவனித்த 17 வயது மகள், இது சம்பந்தமாக குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, அவரை உடனடியாக கார்தலா ஆரம்பச் சுகாதார நிலையத்திற்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இருப்பினும், முதலுதவி சிகிச்சைக்குப் பிறகும், அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததால், அவர் கோர்பாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்குத் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை அன்று சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், சம்பவம் குறித்து மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது சம்பந்தமான தகவல் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சில இணைய வாசிகள் ரீல்ஸ் மோகம் பலரின் உயிரைப் பறித்து வரும் சூழலில், மக்களுக்கு ஆபத்தானதாக ரீல்ஸ் மாறிவருவதாகவும் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)