Politics
ரீல்ஸ் வீடியோ மோகத்தால் 53 வயது பெண் தற்கொலை
கோர்பா: சத்தீஸ்கரில், சமூக வலைதளத்தில், 'ரீல்ஸ்' வீடியோக்களுக்கு அடிமையான 53 வயது பெண், இணைய இணைப்பு கிடைக்காததால் விரக்தி அடைந்து, பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
சத்தீஸ்கர் மாநிலம், கோர்பா மாவட்டம், கெரகச்சார் கிராமத்தைச் சேர்ந்தவர் மங்லோ பாய் சாரதி, 53. இவருக்கு திருமணமாகி 17 வயதில் மகள் உள்ளார். பணிக்கு செல்லாமல் வீட்டை கவனித்து வரும் இவர், மொபைல் போனில், 'ரீல்ஸ்' எனப்படும், குறும் வீடியோக்களை தொடர்ந்து பல மணி நேரம் பார்க்கும் பழக்கத்துக்கு அடிமையாகி இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 5ம் தேதி வீட்டில் இருந்தபடி மொபைல் போனில் 'ரீல்ஸ்' பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது இணைய இணைப்பு அடிக்கடி துண்டிக்கப்பட்டதால், வீடியோக்களை தொடர்ச்சியாக பார்க்க முடியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர், மொபைல் போனை தரையில் வீசி எறிந்துவிட்டு வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்தார்.
இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்ட அவரை, அவரது மகள் மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு சிகிச்சை பலனின்றி மங்லோ பாய் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.