Crime, law and justice
போலீஸ் ஸ்டேஷன் சிசிடிவி பதிவுகள் எவ்வளவு நாட்களுக்கு பராமரிக்கப்படும்? டி.ஜி.பி.,யிடம் அறிக்கை கேட்டது ஐகோர்ட்

சென்னை: தமிழகம் முழுதும் காவல் நிலையங்களில் உள்ள, 'சி.சி.டி.வி' எனப்படும், கண்காணிப்பு கேமரா பதிவுகள், எவ்வளவு காலத்துக்கு பராமரிக்கப்படும் என்பது குறித்து, டி.ஜி.பி., அறிக்கை தாக்கல் செய்யும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரேஷன் அரிசி கடத்த அனுமதிப்பதாக கூறி, 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக, சேலம் மாவட்டம், வடக்கு மல்லியக்கரையைச் சேர்ந்த சக்திவேல் என்பவர், லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தார்.
இது தொடர்பாக, சேலம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை ஆய்வாளர் ராமராஜன், உதவி ஆய்வாளர்கள் சரவணகுமார், ராமகிருஷ்ணன் ஆகியோர் மீது, லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வழக்கில் உண்மையை வெளிக்கொண்டு வர, புகார்தாரர் சக்திவேல் மற்றும் அவரது தாய் பயன்படுத்திய மொபைல் போன் பதிவுகளையும், சேலம் லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் பாதுகாக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், உதவி ஆய்வாளர் சரவணகுமார் வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு, நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில், 15 நாட்களுக்கான கண்காணிப்பு கேமரா பதிவுகள் மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
உதவி ஆய்வாளர் தரப்பில், 'காவல் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை, 18 மாதங்களுக்கு பாதுகாக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. 'ஆனால், சேலம் லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தில், 15 நாட்களுக்கான பதிவுகள் மட்டுமே உள்ளதாக சொல்வது, உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு விரோதமானது' என, தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, '18 மாதங்களுக்கு பதிலாக, 15 நாட்களுக்கான கண்காணிப்பு கேமரா பதிவுகள் மட்டும் பராமரிக்கப்படுவது ஏன்' என, கேள்வி எழுப்பினார்.
மேலும், 'தமிழகம் முழுதும் காவல் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் எவ்வளவு காலத்துக்கு பராமரிக்கப்படும் என்பதை விளக்கி, டி.ஜி.பி., அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டார். விசாரணையை, வரும் 10ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
