நகராட்சி மூன்று நுண் உரக்குடில்களில் தயாரிப்பு இயற்கை உரம்!: மாதம் தோறும் 120 டன் விவசாயிகளுக்கு வழங்கல்

உடுமலை: உடுமலை நகராட்சியில் சேகரிக்கப்படும் மக்கும் கழிவுகளிலிருந்து, மாதம் தோறும், 100 முதல், 120 டன் இயற்கை உரம் தயாரித்து, விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. உடுமலை நகராட்சியில், 33 வார்டுகளில், 17,526 வீடுகள், 3,068 வணிகம், தொழிற்சாலைகள் உள்ளன. நாள் ஒன்றுக்கு, 28 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது.
திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், மக்கும் கழிவுகளை உரமாக மாற்றும் வகையில், ராஜேந்திரா ரோடு, பொள்ளாச்சி ரோடு பகுதியில், மூன்று நுண் உரக்குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இங்கு தலா, 4 டன் அரவைத்திறன் கொண்ட இயந்திரம், 12 டன் கொள்ளளவு கொண்ட, ஆறு தொட்டிகள் அமைக்கப்படுகிறது.
இங்கு, நாள் தோறும் நகரில் சேகரிக்கப்படும், 12 டன் மக்கும் கழிவுகள் கொண்டு வரப்பட்டு, கன்வேயர் பெல்ட் உடன் கூடிய அரவை இயந்திரத்தில் நன்கு அரைக்கப்பட்டு, ஆறு தொட்டிகளில், நாள் ஒன்றுக்கு ஒரு தொட்டி வீதம் இடப்படுகிறது.
இவ்வாறு, தொடர்ந்து கழிவுகள் கொட்டப்பட்டு, விரைவில் மக்கும் வகையில், நீர், உருண்டை வெல்லம், புளித்த தயிர் உள்ளிட்டவற்றை கொண்டு தயாரிக்கும் இ.எம்., கரைசல் மற்றும் மாட்டுச்சாணம் தெளிக்கப்படுகிறது.
தொடர்ந்து, தொட்டிகள் படிப்படியாக மாற்றப்பட்டு, 45 நாட்களில் இயற்கை உரமாக மாற்றப்படுகிறது. இவ்வாறு, மூன்று உரக்குடில்களிலும், மாதம் தோறும், தலா, 40 டன் இயற்கை உரம் வீதம், நகராட்சி வாயிலாக, 100 முதல், 120 டன் வரை தயாரிக்கப்படுகிறது. இதனை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
விவசாயிகள் ஆர்வம் நகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:
நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், கழிவுகள் நான்கு வகையாக தரம் பிரித்து, வாங்கப்படுகிறது. இதில், காய்கறி கழிவுகள், உணவு கழிவுகள், ஈரக்கழிவுகள் என மக்கும் கழிவுகள் தனியாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு வார்டுகளிலிருந்தும், வாகனங்கள் வாயிலாக நுண் உரக்குடில்களுக்கு கொண்டு வரப்படுகிறது.
அங்கு, கழிவுகள் உலர வைத்து, இயந்திரம் வாயிலாக துகள்களாக அரைக்கப்படுகிறது. 12 டன் கொள்ளவு கொண்ட, ஆறு தொட்டிகளில், நாள் வாரியாக, கொட்டப்பட்டு, விரைவில் மக்கும் வகையில், இ.எம்.,கரைசல் மற்றும் மாட்டுச்சாணம் தெளிக்கப்படுகிறது. இவ்வாறு, 45 நாட்களில், இயற்கை உரம் உருவாகிறது.
இதனை. விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. தென்னை, வாழை, காய்கறி உள்ளிட்ட பயிர்களுக்கு, இயற்கை உரமாக உள்ளதால், விவசாயிகள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
இயற்கை உரம் தேவைப்படும் விவசாயிகள் நகராட்சி அலுவலகத்தை அணுகலாம்.
இவ்வாறு, தெரிவித்தனர்.