Sport
பல்கலை மண்டல பூப்பந்தாட்டம் லயோலா கல்லுாரி ‘சாம்பியன்’
சென்னை: சென்னை பல்கலையின் ‘ஏ’ மண்டல பூப்பந்தாட்டம் எனும் பால் பேட்மின்டன் போட்டியில், லயோலா கல்லுாரி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
சென்னை பல்கலையின், ‘ஏ’ மண்டல பால் பேட்மின்டன் போட்டி, மேடவாக்கத்தில் உள்ள காயிதே மில்லத் கலை கல்லுாரியில் நேற்று முன்தினம் நிறைவடைந்தது.
போட்டியில், மண்டலத்திற்கு உட்பட ஆறு கல்லுாரிகள் மோதின. இறுதிப்போட்டியில், விறுவிறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லயோலா கல்லுாரி, எஸ்.ஆர்.எம்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரி அணியை 2 – 1 என்ற செட் கணக்கில் வீழ்த்தியது.
முதல் செட்டை, 35 – 22, என லயோலா கைப்பற்றியது. இரண்டாவது செட்டில், 24 – 35 என தடுமாறிய நிலையில், வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது செட்டில் லயோ கல்லுாரி, 36 – 34 என, போராடி சாம்பியன் பட்டத்தை வென்றது.
இதில், எஸ்.ஆர்.எம்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரி இரண்டாம் இடத்தையும், செங்கல்பட்டு ஆர்.வி.ஜி., கல்லுாரி மூன்றாம் இடத்தையும், தாம்பரம் டி.எம்.ஜி., கல்லுாரி நான்காம் இடத்தையும் பிடித்தன.
வெற்றி பெற்ற லயோலா கல்லூரி அணிக்கு, காயிதே மில்லத் கல்லுாரியின் முதல்வர் அம்துல் தவாப், துணை முதல்வர் மணிகண்டன் உள்ளிட்டோர் பரிசு வழங்கினர்.