Politics
காங்கிரஸ் மாஜி எம்.எல்.ஏ., அசன் மவுலானாவுக்கு தேர்தலில் போட்டியிட மூன்று ஆண்டுகளுக்கு தடை தேர்தல் கமிஷன் நடவடிக்கை

சென்னை: தேர்தல் செலவு கணக்கை முறையாக தாக்கல் செய்யாத காரணத்தால், காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ., அசன் மவுலானாவுக்கு, தேர்தலில் போட்டியிட மூன்று ஆண்டுகள் தடை விதித்து, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 2021ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், சென்னை வேளச்சேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில், அசன் மவுலானா போட்டியிட்டார். அப்போது, தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, ராகுல் பிரசாரம் செய்தார்.
விளக்கம் இது தொடர்பாக, 10 நா ளிதழ்களில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டன. இந்த விளம்பரங்களுக்கான செலவு தொகை, 32 லட்சத்து 5,915 ரூபாய்.
வேட்பாளர் அசன் மவுலானாவின் செலவு, 17 லட்சத்து 3,548 ரூபாய், விளம்பர செலவான 32 லட்சத்து 5,915 ரூபாய் சேர்த்து, மொத்தம் 49 லட்சத்து, 9,463 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
இது, நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச வரம்பு 30.80 லட்சம் ரூபாயை விட அதிகம் என்பதால், இந்த தொகையை செலவு கணக்கில் காட்ட வில்லை என கூறி, 2021ம் ஆண்டு, அசன் மவுலானாவுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியது.
அதற்கு, 'இந்த விளம்பரங்களை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, அனைத்து கூட்டணி வேட்பாளர்களுக்காக செய்தது. இதற்கு நான் ஒப்புதல் அளிக்கவில்லை. செலவை கட்சி கணக்கில் தான் சேர்க்க வேண்டும்' என, அசன் மவுலானா விளக்கம் அளித்தார்.
இருப்பினும், 'தேர்தல் செலவு கணக்கை முறையாக சமர்ப்பிக்காததால், உங்களை ஏன் தகுதி நீக்கம் செய்யக் கூடாது?' என, விளக்கம் கேட்டு, 2023ம் ஆண்டு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியது.
தகுதி அற்றவர் இதற்கும் பதிலளித்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு பின், 2025ம் ஆண்டு ஆக., 14ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி, அசன் மவுலானாவுக்கு எதிராக, தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
இந்நிலையில், மூன்று ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட, அசன் மவுலானாவுக்கு தடை விதித்து, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் செலவு கணக்கை முறையாக தாக்கல் செய்யாத காரணத்தால், தேர்தல் கமிஷன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 மற்றும் 78ன் கீழ், அசன் மவுலானா முறையான மற்றும் உண்மையான தேர்தல் செலவுக் கணக்கை தாக்கல் செய்ய தவறி விட்டார்.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவு '10 ஏ' கீழ், அவரை, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட ஆக., 19ல் இருந்து, மூன்று ஆண்டுகளுக்கு, லோக்சபா, சட்டசபை, மேல்சபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கவும், உறுப்பினராக நீடிக்கவும் தகுதியற்றவர் என அறிவிக்கப்படுகிறார்.
உத்தரவு விபரங்கள் மேலும், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் விசாரணைகளுக்கு ஆஜராகி விளக்கம் தெரிவிக்கவில்லை; விளம்பரங்களில் வேட்பாளரின் பெயர், புகைப்படம் மற்றும், 'வேளச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் அசன் மவுலானாவுக்கு ஓட்டளியுங்கள்' என, நேரடியாக ஓட்டு சேகரிக்கப்பட்டு இருந்தது.
சட்டப்படி, ஒரு வேட்பாளரின் வெற்றிக்கு நேரடியாக பயன்படும் விளம்பரச் செலவுகள், வேட்பாளரின் கணக்கிலேயே சேர்க்கப்பட வேண்டும். மேலும், அவர் தரப்பில் கூறப்பட்ட தாமதம் குறித்த காரணங்கள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தேர்தல் கமிஷன் உத்தரவு விபரங்கள், தமிழக அரசிதழிலும் வெளியிடப்பட்டு உள்ளன.