Politics
தேர்தலில் போட்டியிட காங்கிரஸின் அசன் மவுலானாவுக்கு தடை - நீதிமன்றத்தை நாட முடிவு!

அடுத்த 3 ஆண்டுகளுக்கு நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் அசன் மவுலானா போட்டியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
2021 தேர்தல் செலவுக் கணக்குகளை முறையாக தாக்கல் செய்யாத காரணத்தால், காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அசன் மவுலானா 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில், வேளச்சேரி தொகுதியில் போட்டியிட்ட அசன் மவுலானா, தேர்தல் செலவுக் கணக்கில் உண்மையான மற்றும் சரியான கணக்கை தாக்கல் செய்ய தவறியதாக தேர்தல் ஆணையம் குற்றம்சாட்டியுள்ளது.
குறிப்பாக, 17 லட்சம் ரூபாய் செலவு செய்ததாக அசன் மவுலானா குறிப்பிட்டுள்ள நிலையில், நாளிதழ்களில் விளம்பரம் செய்த 32 லட்சம் ரூபாயை குறைத்து காட்டி இருப்பதாக தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது. அதன்படி அனுமதிக்கப்பட்ட 30 லட்சம் ரூபாயை கடந்து அசன் மவுலானா செலவு செய்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக 2 முறை விளக்கம் கோரியும், அசன் மவுலானா ஆஜராகவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. எனவே, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி, தேர்தல் செலவுக் கணக்குகளை முறையாக தாக்கல் செய்யாததால், அடுத்த 3 ஆண்டுகளுக்கு நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் அசன் மவுலானா போட்டியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அசன் மவுலானா, இதனை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன் என்று கூறினார். தன் மீது பாரபட்சம் காட்டப்பட்டு இருப்பதாகவும், தேர்தல் ஆணையத்தில் உரிய விளக்கம் அளித்தும் ஏன் நடவடிக்கை எடுத்தார்கள் என்று தெரியவில்லை என்றும் அசன் மவுலானா தெரிவித்தார்.
