Economy, business and finance
ஜே.கே.டயர் வைத்துள்ள நம்பிக்கையை மதிக்கிறோம்: அமைச்சர் கீர்த்தனா அறிக்கை

சென்னை: 'ஜே.கே.டயர் மற்றும் பிற முன்னணி நிறுவனங்கள் தமிழகத்தின் மீது தொடர்ந்து வைத்துள்ள நம்பிக்கையை மதிக்கிறோம்' என, தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை தொகுதி த.வெ.க., - எம்.எல்.ஏ., தாஹிரா சட்டசபையில் பேசும்போது, 'என் தொகுதியில் உள்ள ஜே.கே.டயர் நிறுவனம் இரவு எல்லாம் எறிய விடுறாங்க. அதனால், சுற்றுச்சூழல் அதிகமாக பாதிக்கிறது. அந்த நிறுவனத்தை இழுத்து மூட வேண்டும்' என, சட்டசபையில் பேசியிருந்தார்.
தொழில்துறை முன்னாள் அமைச்சர் ராஜா விடுத்த அறிக்கையில், 'மாசுபாடு பிரச்னை இருந்தால், நடவடிக்கை எடுத்து, அதை சரி செய்ய வேண்டும். முழுதுமான முடக்கத்திற்கு அழைப்பு விடுத்தால், அது தொழில்துறைக்கு தவறான செய்தியை அனுப்பும் என்றும், காஞ்சிபுரத்தில் ஜே.கே.டயர் ஆலை உள்ளது தெரியும். ஆனால், ராணிப்பேட்டையில் இருப்பதாக தெரியாது' என தெரிவித்தார்.
இதையடுத்து, ராணிப்பேட்டையில் ஜே.கே.டயர் நிறுவன ஆலை உள்ளதா என சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், அனைத்து விதிகளையும் பின்பற்றி நடந்து வருவதாக ஜே.கே.டயர் நிறுவனம் விளக்கம் அளித்தது.
தமிழகத்திற்கு தொழிற்சாலைகள் தேவை. ஆனால், சுற்றுச்சூழல் விதிகளுக்கு இணங்காமல் வளர்ச்சி ஏற்படக் கூடாது. இரண்டும் ஒன்றிணைந்து செல்ல வேண்டும். தன் செயல்பாடுகள், பொருந்தக்கூடிய அனைத்து சட்டப்பூர்வ சுற்றுச்சூழல் அனுமதிகள், ஒழுங்குமுறை தேவைகளுக்கு இணங்கியே உள்ளதாக ஜே.கே.டயர் நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.
சமீபத்தில் நடந்த வெற்றி முதலீட்டாளர்கள் மாநாட்டில் வழிகாட்டி நிறுவனத்துடன், 5,143 கோடி ரூபாய் முதலீடு செய்ய ஜே.கே.டயர் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. தமிழகத்தின் மீது அந்நிறுவனம் தொடர்ந்து வைத்துள்ள நம்பிக்கையை நாங்கள் மதிக்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.