Arts, culture, entertainment and media
தேசிய குத்துச்சண்டை போட்டிக்கு திருவொற்றியூர் மாணவர்கள் தேர்வு
திருவொற்றியூர், செப். 6– மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற திருவொற்றியூரைச்
மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற திருவொற்றியூரைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள், தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.
தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில், மாநில அளவிலான பாரதியார் தின – குடியரசு தின குத்துச்சண்டை போட்டிகள், செப்., 1 முதல் 4-ம் தேதி வரை நாமக்கல் பி.ஜி.பி., பள்ளி வளாகத்தில் நடந்தது. இதில், 32 மாவட்டங்களைச் சேர்ந்த 3,000-க்கும் மேற்பட்ட மாணவ–மாணவியர் பங்கேற்றனர்.
சென்னை மாவட்டம் சார்பில், ஸ்கொயர் ஸ்போர்ட்ஸ் குத்துச்சண்டை அகாடமியில் பயிற்சி பெறும் திருவொற்றியூரைச் சேர்ந்த மாணவ – மாணவியர் பங்கேற்றனர். 14 வயதுக்குட்பட்ட மாணவியர் பிரிவில், மணலி புதுநகர் அரசு உயர்நிலைப் பள்ளி எட்டா-ம் வகுப்பு மாணவி கிருஷ்ணவேணி, செங்கல்பட்டைச் சேர்ந்த தான்யாஸ்ரீயை 3 – 0 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.
14 வயதுக்குட்பட்ட மாணவர் பிரிவில், தரம் இந்துஜா பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவர் அந்தோணி ஜோயல், திருவள்ளூரைச் சேர்ந்த புகழ்வீராவை இறுதிப் போட்டியின் முதல் சுற்றிலேயே ‘நாக் அவுட்’ முறையில் வென்று தங்கம் கைப்பற்றினார்.
19 வயதுக்குட்பட்ட மாணவர் பிரிவில், விக்டோரியா மெட்ரிக்குலேசன் பள்ளி பிளஸ் 2 மாணவர் ரஞ்சன், அரியலுாரைச் சேர்ந்த புருஷோத்தம்குமாரை முதல் சுற்றிலேயே ‘நாக் அவுட்’ முறையில் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.
மாநிலப் போட்டியில் முதலிடம் பிடித்த அந்தோணி ஜோயல், ரஞ்சன் ஆகியோர், 70-வது ‘ஸ்கூல் கேம்ஸ் பெடரேசன் ஆப் இந்தியா’ தேசிய குத்துச்சண்டை போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை அகாடமி பயிற்சியாளர்கள் சதீஷ், சிவபிரியா, பாலசந்தர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் பாராட்டினர்.