மெஸ்ஸி வருகை நிகழ்ச்சியில் மோசடி.. கேரளாவில் 5 இடங்களில் SIT சோதனை.. விசாரணையில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

கேரளாவில் கால்பந்து ஜாம்பவான் மெஸ்சியை அழைத்து வர ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் நிதி முறைகேடு மற்றும் வரி ஏய்ப்பு நடந்ததாக எழுந்த புகாரில், தனியார் டிவி அலுவலகம் மற்றும் அதன் உரிமையாளர்களின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டுள்ளது.
கேரளாவில் கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்சி மற்றும் அர்ஜென்டினா அணியை அழைத்து வந்து சர்வதேச போட்டி நடத்தும் திட்டம் கடந்த ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான தனியார் ஸ்பான்சராக ரிப்போர்டர் பிராட்காஸ்டிங் கம்பெனி செயல்பட்டது. நிகழ்ச்சி தொடர்பாக அர்ஜென்டினா கால்பந்து சங்கத்திற்கு அதன் வசூல் முகவர் மூலம் சுமார் 126 கோடியே 4 லட்சம் ரூபாய் பரிமாற்றம் செய்யப்பட்டதாக சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், நிதி மற்றும் ஒப்பந்த சிக்கல்கள் காரணமாக மெஸ்சி உள்ளிட்ட அர்ஜென்டினா அணியின் கேரள வருகை திட்டம் நிறைவேறவில்லை. இதுதொடர்பான விசாரணையில், வெளிநாட்டு பரிவர்த்தனைகளுக்கு செலுத்த வேண்டிய வரியில் சுமார் 25 கோடியே 78 லட்சம் ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்திருக்கலாம் என சிறப்பு புலனாய்வுக் குழு சுட்டிக்காட்டியுள்ளது. இதையடுத்து ஏமாற்றுதல், மோசடி மற்றும் சதித்திட்டம் தொடர்பான பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், நீதிமன்ற உத்தரவின் பேரில் புதன்கிழமை அதிகாலை SIT அதிகாரிகள் அதிரடி சோதனையில் இறங்கினர்.
இந்நிலையில், ADGP பி.விஜயன் தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக் குழுவினர், களமசேரியில் உள்ள ரிப்போர்டர் பிராட்காஸ்டிங் கம்பெனி அலுவலகம் மற்றும் அகஸ்டின் சகோதரர்களின் கொச்சி, வயநாடு வீடுகள் உள்ளிட்ட 5 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது ஊழியர்களின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், செய்தி அறையில் பணிகளை மேற்கொள்ள போலீசார் தடையாக இருந்ததாகவும் டிவி நிர்வாகம் குற்றம்சாட்டியது.
ஆனால், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலேயே சோதனை நடைபெற்றதாகவும், விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்ததால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, ஆண்டோ அகஸ்டினின் வயநாட்டில் உள்ள குடும்ப வீட்டில் சட்டவிரோதமாக மதுபானங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக சிறப்புப் புலனாய்வுக் குழு கலால் துறைக்கு தகவல் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து கல்பற்றா கலால் வட்டார ஆய்வாளர் ஷரஃபுதீன் தலைமையிலான குழுவினர் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் இருந்து 43 லிட்டர் வெளிநாட்டு மதுபானங்களும், 7 லிட்டர் ஒயினும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக கலால் துறையினர் வழக்குப்பதிவு செய்து, இவ்வளவு பெரிய அளவிலான மதுபானங்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே மெஸ்சி நிகழ்ச்சி தொடர்பான நிதி முறைகேடு வழக்கில் 5 இடங்களில் SIT சோதனை நடத்தி வரும் நிலையில், வயநாடு வீட்டில் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது ஆண்டோ அகஸ்டினுக்கு மேலும் ஒரு சட்ட நெருக்கடியை உருவாக்கியுள்ளது. மெஸ்சியை கேரளாவுக்கு அழைத்து வரும் திட்டம் நிறைவேறாமல் போன நிலையில், அதைச் சுற்றிய நிதிப் பரிவர்த்தனைகள் தொடர்பான விசாரணை தற்போது பல்வேறு சட்ட நடவடிக்கைகளாக விரிவடைந்துள்ளது.
ஒருபுறம் SIT சோதனை மறுபுறம் வயநாடு வீட்டில் மதுபான பறிமுதல் என அடுத்தடுத்து திருப்பங்கள் அரங்கேறி வரும் நிலையில், இந்த விவகாரத்தில் மேலும் என்னென்ன தகவல்கள் வெளிவரப்போகிறது என்பதே பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
