நான் சொல்றேன் ஜாமீன் கொடு! - நீதிபதியையே மிரட்டிய சுகேஷ் சந்திரசேகர்

கடந்த 2017-ஆம் ஆண்டு ஊழல் வழக்கொன்றில் கைதான சுகேஷ் சந்திரசேகர், கான்ஸ்டபிள் மஞ்சீத்தின் செல்போனைப் பயன்படுத்தி டெல்லி சிறப்பு நீதிபதி பூனம் சவுத்ரியின் தொலைபேசி எண்ணுக்கு அழைத்து, உச்ச நீதிமன்ற நீதிபதி என்று சொல்லி மிரட்டிய வழக்கில் அவருக்கு. டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஹர்ஷிதா மிஸ்ரா 8 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்துள்ளார்.
விளையும் பயிர் முளையிலேயே தெரியு மென்பார்கள். பெங்களூரைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் அதற்கேற்ப 17 வயதிலேயே தன் லீலைகளைத் தொடங்கிவிட்டான். கர்நாடக அரசு அதிகாரிகளிடமும், அரசியல்வாதிகளிட மும் செல்வாக்கு கொண்ட நபர்போல நடித்து, ஒரு குடும்பத்திடம் சுமார் ரூ.1.14 கோடி மோசடிசெய்ததாக பெங்களூரு போலீஸ் வழக்குப் பதிவுசெய்தது. அதற்காக அவன் அப்போது கைது செய்யப்பட்டான்.
சுகேஷ் சந்திரசேகர், சுகாஷ் சந்திரசேகர் இன்னும் வேறுபல பெயர்களிலும் செயல்பட்ட இவன், தொலைபேசியில் பெரிய அரசு அதிகாரிபோல பேசுவது, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிபோல நடிப்பது, மத்திய அமைச்சக அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொள்வது, அரசியல்வாதிகளுடன் தனக்கு நெருங்கிய தொடர்பிருப்பதாகக் கூறுவது, பிரதமர் அலுவலகம், உள்துறை அமைச்சகம் போன்ற உயர்ந்த நிறுவனங்களின் பெயர் களைப் பயன்படுத்துவது, பெரிய தொகை கொடுத்தால் அரசு வேலை, ஒப்பந்தம், வழக்கில் உதவி, சிறையிலிருக்கும் நபரை வெளியே கொண்டுவருதல் போன்றவற்றைச் செய்துதருவதாகக் கூறுவது இதுதான் அவனது மோசடி முறை.
2017-ல் அ.தி.மு.க.வின் “இரட்டை இலை” சின்னத்தை சசிகலா அணிக்கு பெற்றுத்தருவதாகக் கூறி, தேர்தல் ஆணைய அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்கமுயன்ற வழக்கில் சுகேஷ் கைதுசெய்யப்பட்டான்.
ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரி என்றழைக்கப்பட்ட, தமிழகத்தில் ஜெ.க்கு அடுத்தபடியாக இருந்த சசிகலாவையும், அவரது உறவினரான தினகரனையுமே, கட்சி சின்னத்தைப் பெற்றுத்தருவதாகக் கூறி பணம் பெற்று ஏய்க்கிறானென்றால் அவன் எத்தகையவனாக இருப்பானென புரிந்துகொள்ளமுடியும்?
2009, 2011 ஆண்டுகளில் பெங்களூரில் மோசடி வழக்குகள், 2013-ல் சென்னை தொடர்பான மோசடி வழக்கில் கொல்கத்தாவில் கைது, பின்னர் மும்பையில் வழக்குகள் என அவனது குற்றச்செயல்கள் விரிந்தன.
2017-ல் சுகேஷ் ஒரு ஊழல் வழக்கில் டெல்லி சிறையிலிருந்தான். அந்த வழக்கை டெல்லியிலிருந்த சிறப்பு நீதிபதி பூனம் சௌத்ரி விசாரித்துவந்தார். சுகேஷுக்கு அந்த வழக்கில் ஜாமீன் வேண்டும். அதற்காக அவன் மூளை குறுக்குவழியில் வேலைசெய்தது.
மோசடி வேலைகளில் பணம் கொட்டியதால் சுகேஷுக்குப் பணம் ஒரு பிரச்சனையல்ல. டெல்லி சிறையிலிருந்தபோதும், அங்கு அவன் ஒரு கைதியைப்போல இருக்கவில்லை. மாதத்திற்கு சுமார் ரூ1.5 கோடி வரை செலவழித்து சிறைக்குள் தனி வசதிகளையும், செல்போன் பயன்படுத்தும் சுதந்திரத்தையும் பெற்றிருந்தான். சிறை அதிகாரிகள் இதைக் கண்டுகொள்ளாமலிருக்க பலருக்கும் உரிய கவனிப்புகள் செய்யப்பட்டன.
தன்னுடைய வழக்கை விசாரித்த டெல்லி சிறப்பு நீதிபதி பூனம் சௌத்ரியின் பிரத்யேக எண்ணுக்கு, ஒரு காவல்துறை அதிகாரியின் செல்போனைப் பயன்படுத்தி தொடர்பு கொண்டான். தன்னை உச்சநீதிமன்ற நீதிபதியின் தனிப்பட்ட செயலாளர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, சில விவரங்களைத் தெரிவித்துவிட்டு உச்சநீதிமன்ற நீதிபதி பேசுவதாகக் குறிப்பிட்டான். உச்சநீதிமன்ற நீதிபதி எனச் சொல்லிக்கொண்டு அவனே குரலை மாற்றிப் பேசினான். "சுகேஷுக்கு ஜாமீன் வழங்கவேண்டும். வழங்காவிட்டால், பூனம் சௌத்ரி உச்சநீதிமன்ற நீதிபதியாக பணிஉயர்வு பெறுவதில் தடங்கல் வரும்' என்று மிரட்டினான்.
அதாவது, நீதிமன்றத்தில் வழக்கறிஞர் மூலம் சட்டரீதியாக ஜாமீன் கேட்பதற்குப் பதிலாக, உச்சநீதிமன்ற நீதிபதி தோரணையில் நீதிபதியையே மிரட்டி ஜாமீன் பெறமுயன்றான். ஆனால், பூனம் சௌத்ரி, சுகேஷின் மிரட்டலைப் புறக்கணித்து வழக்குப் பதிவுசெய்ததால் சுகேஷ் சிக்கினான். நீதிபதியே வழக்குப் பதிவுசெய்ததால், சிறைக்குள்ளிருந்து சுகேஷ் எப்படி செல்போனில் பேசினான் என்ற கேள்வியெழுந்தது. டெல்லி போலீஸ் விசாரணையில், சிறை அதிகாரிகள் பலருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. சுகேஷ் மற்றும் சிறை அதிகாரிகள் தொடர்பான வழக்கில் 82 சிறை ஊழியர்கள் மீது எஃப்.ஐ.ஆர். பதிவுசெய்யப் பட்டது. அவர்களில் 8 பேர் கைது செய்யப் பட்டனர்.
கடந்த ஆகஸ்ட் 20, 2026 அன்று டெல்லி நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பளித்தது. வழக்குப் பதியப்பட்ட முதல் இரு பிரிவுகளில் 2 ஆண்டு கடுங்காவலும், ரூ.5000 அபராதமும் விதித்ததோடு, அச்சுறுத்தியதற்காக 4 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்தது. இந்த மூன்று தண்டனைகளும் ஒரேசமயத்தில் அல்லாமல் அடுத்தடுத்து அனுபவிக்க நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
தற்சமயம், சுகேஷுக்கு எதிராக 31 வழக்குகள் உள்ளன. அவற்றில், 26 வழக்குகளில் அவன் பெயிலில் இருக்கிறான். அவனுக்கெதிராக பல மாநிலங்களில் பல்வேறு மோசடி, ஏமாற்று, ஆள்மாறாட்டம், பணமோசடி மற்றும் மிரட்டல் வழக்குகள் உள்ளன.
சுகேஷ் சந்திரசேகர் மீதான அடுத்தடுத்த வழக்குகளில் தீர்ப்பு வரும்பட்சத்தில் அவன் சிறையிலிருந்து வெளியே வர வாய்ப்பேயில்லை. அவனது ஆயுள் சிறைக்குள்ளேயே முடிந்துவிடும் என்பதுதான் சட்ட நிபுணர்களின் அபிப்ராயம். உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்துத்தானே ஆகவேண்டும்!
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)