Politics
"முறிந்த காலுடன் 7000 அடி மலையில் ஏறினேன்" - ஈரானில் சிக்கி 50 மணிநேரம் போராடி தப்பிய அமெரிக்க வீரர்
A US soldier has shared his experience of how he survived—remaining in hiding for 50 hours—after falling into Iranian territory from a plane damaged by a missile during an attack on Iran.

ஈரான் மீது தாக்குதல் நடத்தியபோது ஏவுகணை பட்டு சேதம் அடைந்த விமானத்தில் இருந்து ஈரானுக்குள் விழுந்து 50 மணி நேரம் தலைமறைவாக இருந்து தப்பியது எப்படி என்பது குறித்து அமெரிக்க வீரர் தனது அனுபவத்தைக் பகிர்ந்து கொண்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் 2ம் தேதி அமெரிக்க விமானங்கள் ஈரான் மீது தாக்குதல் நடத்தியபோது ஈரான் வீசிய ஏவுகணை ஒன்று அமெரிக்காவின் F-15E ஸ்ட்ரைக் ஈகிள் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது. அந்த விமானத்தில் இருந்த இரண்டு பேரும் ஈரானுக்குள் உயிரோடு விழுந்தனர்.
அவர்களில் பைலட்டான அல்பா என்பவர் அடுத்த சில மணி நேரத்தில் அமெரிக்கப் படையால் மீட்கப்பட்டுவிட்டார். ஆனால் ஆயுதங்களைக் கையாளக்கூடிய மற்றொரு அதிகாரியான பிராவோவை உடனே மீட்க முடியவில்லை.
அவர் 50 மணி நேரம் ஈரான் மலைப்பகுதியில் பதுங்கி இருந்தார். அவரை அமெரிக்கப் படை அதிரடி மீட்புப் பணியில் ஈடுபட்டு மீட்டது. அமெரிக்க ராணுவம் தனது வரலாற்றிலேயே மிகப்பெரிய தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஒன்றை மேற்கொண்டது. பிராவோ, ஈரானின் கரடுமுரடான மலைப் பிளவில் காயங்களுடன் மறைந்திருந்து, மீட்கப்படுவதற்கு முன்பு கிட்டத்தட்ட 50 மணி நேரம் எதிரிப் பகுதிக்குள் சிக்கியிருந்தார்.
பாதுகாப்பு காரணங்களால் பிராவோ என்று மட்டும் அறியப்படும் அந்த அதிகாரி முதன்முறையாக தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். இதில், கிட்டத்தட்ட செங்குத்தாகக் கீழே விழுந்து உயிர் பிழைத்தது, முதுகெலும்பு உடைந்த நிலையில் 7,000 அடி உயர மலைமுகட்டில் ஏறியது மற்றும் அமெரிக்கப் படைகள் தன்னை மீட்டு அழைத்துச் செல்லும் வரை இரண்டு நாட்கள் ஈரானியப் படைகளிடமிருந்து மறைந்திருந்தது ஆகிய தனது அனுபவங்களை அவர் பகிர்ந்துள்ளார்.
இது குறித்து அவர் அளித்த பேட்டியில், ''அமெரிக்க மத்திய கட்டளை பிரிவின் தளபதியான அட்மிரல் பிராட் கூப்பரின் உத்தரவுப்படி அன்றிரவு இஸ்பஹானுக்கு தெற்கே உள்ள ஒரு மலைப்பகுதிக்கு அருகிலுள்ள தொழிற்சாலைகளைக் குறிவைத்தோம்.
ஈரான் தனது அதிக செறிவூட்டப்பட்ட அணுப் பொருட்களில் பெரும்பகுதியை அந்தப் பகுதியில்தான் வைத்திருப்பதாக நம்பப்பட்டது. ஈரானிய ஆயுதம் ஒன்று எங்கள் மீது தாக்கும் வரை, அந்த நாள் எங்களுக்குப் போரில் வழக்கமான ஒரு நாளாகவே இருந்தது.
ஏவுகணை விமானத்தைத் தாக்கியபோது சரக்கு ரயில் மோதியது போன்ற உணர்வு ஏற்பட்டது. அந்தப் போர் விமானத்தைக் காப்பாற்ற ஆல்ஃபா தங்களால் இயன்ற அனைத்தையும் செய்தார்.
ஆனால் விமானத்தைக் காப்பாற்ற முடியாது என்பதை விரைவாக உணர்ந்துகொண்டதால் இருவரும் வெளியேறினோம். ஒரு கட்டத்தில் நான் மேலே பார்த்தபோது பாராசூட் எதுவும் தெரியவில்லை. அதுவே என் வாழ்நாளில் நான் கண்டதிலேயே மிகவும் பயங்கரமான காட்சியாக இருந்தது.
அப்போது நான் சற்று நின்று, 'இறைவா, உமது விருப்பப்படியே ஆகட்டும். ஆனால் நான் இதிலிருந்து உயிர் பிழைக்க வேண்டுமானால், எனக்கு உதவி தேவை' என்று வேண்டிக்கொண்டேன். அதிவேகத்தில் தரையில் மோதியதால் முதுகுத்தண்டு, ஒரு கை மற்றும் தோள்பட்டை ஆகியவை உடைந்தன.
விடிந்ததும் எதிரி நாட்டுப் பகுதியில் நான் இருந்த இடத்தைச் சுற்றிலும் உற்றுப் பார்த்த பிறகு அங்கிருந்து தப்பிச் செல்வதற்கான திட்டத்தை வகுத்தேன். இருபுறமும் செங்குத்தான பாறைகள் கொண்ட ஒரு பள்ளத்தாக்கில் நான் இருப்பதை உணர்ந்தேன்.
எனவே மேலே செல்வதே பாதுகாப்பானது என்று முடிவு செய்தேன். எலும்பு முறிவு ஏற்பட்டிருந்த போதிலும் 7,000 அடி உயரமுள்ள மலை முகடுப் பாதையில் ஏறிச் சென்றேன். எனக்குக் காயங்கள் ஏற்பட்டிருந்தன. ஆனால், நாம் எதிர்கொள்ளும் சவால்களுக்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொண்டு அவற்றை முறியடிக்கும் வகையிலேயே நாங்கள் பயிற்சி பெறுகிறோம். காயங்கள் இருந்தபோதிலும், நான் கீழே விழுந்த இடத்திலிருந்து என்னால் முடிந்தவரை விரைவாக அங்கிருந்து நகர்ந்தேன்," என்று தெரிவித்தார்.
பல விமானங்களைப் பயன்படுத்தி சுமார் 50 மணிநேரம் தேடிய பிறகு, பிராவோ இறுதியாகக் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டார். தன்னை மீட்ட அந்தத் தருணத்தை, என் வாழ்வின் மிகச் சிறந்த தருணங்களில் ஒன்று" என்று பிராவோ விவரித்தார்.

