Politics
இரண்டாம் திருமணம்: அ.தி.மு.க., மாஜி எம்.பி.,க்கு 2 ஆண்டு சிறை

திருவள்ளூர்: இரண்டாவது திருமணம் செய்த முன்னாள் அ.தி.மு.க., - எம்.பி., ஜெகநாதன், 69, என்பவருக்கு, இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து, திருவள்ளூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லியை அடுத்த ஆண்டரசன்பேட்டையைச் சேர்ந்தவர் ஜெகநாதன், 69.
இவர், 1977ம் ஆண்டில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு, ஸ்ரீபெரும்புதுார் எம்.பி.,யாக தேர்வானார்.
இவருக்கு, லலிதா, 63, என்ற மனைவியும், இரு மகன்களும் உள்ளனர். முதல் மனைவிக்கு தெரியாமல், 2016 செப்., 2ல், வனிதா, 58, என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு, தலா ஒரு மகன், மகள் உள்ளனர்.
தகவலறிந்த லலிதா, 2018 பிப்ரவரியில் அளித்த புகாரின்படி, திருவள்ளூர் மகளிர் போலீசார் ஜெகநாதன் மீது வழக்கு பதிந்தனர்.
இது தொடர்பான வழக்கின் விசாரணை, திருவள்ளூர் முதலாவது நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி சுனில் வினோத், குற்றச்சாட்டு உறுதியானதால், ஜெகநாதனுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
பின், நீதிமன்ற உத்தரவுப்படி, நிபந்தனை ஜாமினில் அவர் விடுவிக்கப்பட்டார்.