Politics
ஆணவக் குற்றங்களுக்கு எதிரான சட்டம் எப்போது வரும்?

`பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற உயரிய வாழ்க்கை நெறியைக் கொண்டவர்கள் தமிழர்கள். ‘சாதி இரண்டொழிய வேறில்லை' என்று அந்தக் காலத்திலேயே நம் ஔவை பாட்டி ‘நல்வழி' காட்டியிருக்கிறார். சாதிய வன்கொடுமைகளுக்கும், பெண்ணடிமைத்தனத்துக்கும் எதிராகப் போராடிய பல நூற்றாண்டு வரலாறு உண்டு நமக்கு. ஆனாலும் இன்றுவரை ஆணவக் குற்றங்களுக்கு நம்மால் முடிவுகட்ட முடியவில்லை என்பது மிகப்பெரும் அவமானம்.
சமீபத்தில், தென்காசியில் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரைக் காதலித்து மணம் முடித்த தம்பதியை பெண்ணின் தந்தையே வெட்டிய சம்பவம் நெஞ்சதிர வைக்கிறது. சில வாரங்களுக்கு முன்பு சென்னை, கேளம்பாக்கத்தில் தன் மகளைக் காதலித்த இளைஞரை, தந்தையும் உறவினர்களும் வெட்டிக் கொன்றிருக்கிறார்கள்.
`இது போன்ற கொடுமைகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க, தனிச்சட்டம் தேவை’ என்ற கோரிக்கை நெடுங்காலமாக எழுப்பப்படுகிறது. முன்பிருந்த எந்த அரசும் அந்தக் குரலுக்குச் செவிமடுக்கவில்லை. 2025, அக்டோபரில் கடந்த தி.மு.க அரசு ஆணவக் குற்றங்களுக்கு எதிராகத் தனிச்சட்டம் இயற்றுவது பற்றி ஆய்வுசெய்ய அமைத்த நீதிபதி கே.என்.பாஷா ஆணையம், ஓராண்டாகியும் பரிந்துரைகளை அளிக்கவில்லை. இந்த ஆணையத்தின் செயல்பாட்டை விரைவுபடுத்தி, சட்டத்தை உருவாக்கும் நடவடிக்கையில் தற்போதைய அரசும் தீவிரம் காட்டவில்லை.
2017 முதல் 2026 வரை தமிழகத்தில் 69 ஆணவக்கொலைகள் நடந்திருப்பதாகத் தெரிவிக்கிறது, `எவிடென்ஸ்' அமைப்பின் ஆய்வறிக்கை. ஆனால், காவல்துறை வெறும் 4 ஆணவக்கொலைகள் மட்டுமே நடந்திருப்பதாகச் சொல்கிறது. ஆணவக் குற்றங்கள் இடைநிலைச் சமூகங்களிலும் நிறைய நடக்கின்றன. அவற்றின் மீது சிறப்பு கவனம்கொள்வதற்கான பிரிவுகள் தற்போதைய சட்டங்களில் இல்லை.
கடந்த 30 ஆண்டுகளில், 7 ஆணவக்கொலை வழக்குகளில் மட்டுமே குற்றவாளிகள் தண்டனை பெற்றிருக்கிறார்கள். சாதி, பொருளாதாரம், ஆணாதிக்கம் எனப் பல்வேறு அம்சங்கள் இதன் பின்னணியில் இருப்பதால், ஆணவக் குற்றங்களுக்கெனத் தனிச்சட்டம் உருவாக்குவது ஒன்றே தீர்வு. இதை உச்ச நீதிமன்றமும் பலமுறை சுட்டிக்காட்டியிருக்கிறது.
கர்நாடக அரசு கடந்த ஏப்ரலில் ஆணவக் குற்றங்களுக்கு எதிரான சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறது. இந்தச் சட்டப்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் தம்பதிகளுக்குப் பாதுகாப்பு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 24 மணி நேர ஹெல்ப்லைன், விரைவு நீதிமன்றங்கள், கண்காணிப்புக்குழுக்களும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால், தமிழகத்தில் அது இன்னும் கோரிக்கையாகவே இருக்கிறது.
`சட்டம் வந்துவிட்டால் மட்டும் ஆணவக் குற்றங்களைத் தடுத்துவிட முடியுமா?' என்ற விதண்டாவாதங்களில் கவனம் செலுத்தத் தேவையில்லை. அதிகபட்ச தண்டனை வழங்குவதோடு, வரதட்சணைத் தடுப்புச் சட்டம்போல தாமதமின்றி குற்றவாளிகளைக் கைதுசெய்யும் வகையிலும், காலவரம்புக்குள் விசாரணையை நிறைவு செய்யும் வகையிலும் சட்டம் உருவாக்கப்படும் பட்சத்தில் நிச்சயம் குற்றங்கள் குறையும்.
`மாற்றங்கள் நிகழும்’ என்ற நம்பிக்கையோடு பெரும்பான்மை மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்வர் விஜய், பொறுப்புணர்ந்து ஆணவக் குற்றங்களுக்கு எதிரான சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்!
