Weather
வடகிழக்கு பருவமழை துவங்குவதால் நிழற்கூடங்களை சீரமைக்க எதிர்பார்ப்பு
கரூர்:வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளதால், கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட, பழுதடைந்துள்ள நிழற்கூடங்களை, சீரமைக்க வேண்டும்.
கரூர் மாவட்டத்தில், பிரதான தொழிலாக ஜவுளி உற்பத்தி, கொசுவலை உற்பத்தி மற்றும் பஸ் பாடி கட்டுமான தொழில் போன்றவை ஜரூராக நடந்து வருகிறது.
இதனால், கரூர் மாவட்டத்தில் இருந்து மட்டுமின்றி, நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், நாள்தோறும் நுாற்றுக்கணக்கான தொழிலாளர்கள், கரூருக்கு பல்வேறு வேலை நிமித்தமாக வந்து செல்கின்றனர்.
குறிப்பாக, சேலம் செல்லும் சாலையில் உள்ள புகழூர், தோட்டக்குறிச்சி, மண்மங்கலம், அய்யம்பாளையம் பகுதிகளில் இருந்து நிறைய தொழிலாளர்கள் பஸ்கள் மூலம் கரூர் வந்து செல்கின்றனர். கரூர் - சேலம் நெடுஞ்சாலையில் முக்கிய இடங்களில் பயணிகள் நிற்க வசதியாக நிழற்கூடம் அமைக்கப்பட்டது.
ஆனால், பல இடங்களில் அமைக்கப்பட்ட நிழற் கூடங்களின் மேற்கூரை உடைந்துள்ளது. பயணிகள் உட்கார அமைக்கப்பட்ட சீட்கள் கழன்றும், காணாமல் போய் விட்டது. இதனால், பயணிகள் மழை மற்றும் வெயிலுக்கு நிழற்கூடங்களில் உட்கார முடியாமல் அவதிப்படுகின்றனர்.
இந்நிலையில், கோடைக்காலம் போல கரூர் மாவட்டத்தில் வெயில் சுட்டெரிக்கிறது. சில நாட்களில் மழை பெய்கிறது. அப்போது, நிழற்கூடம் பழுதடைந்த இடங்களில், பஸ்சுக்காக காத்திருப்போர் அவதிப்படுகின்றனர்.
இம்மாத இறுதியில் வட கிழக்கு பருவமழை துவங்க உள்ளதால், மக்களின் நலன் கருதி கரூர்- - சேலம் தேசிய நெடுஞ்சாலைகளில், பழுதடைந்துள்ள நிழற்கூடங்களை சீரமைக்க, கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.--