Lifestyle and human interest
மக்கள் தயாராகியும் சுணக்கத்தில் திட்டம்; திருப்பூர் நல் திருப்பம் இலக்கை எட்டுமா?

திருப்பூர்: கிராமப்புறங்களை குப்பையற்ற மண்டலங்களாக மாற்றும் உயரிய நோக்கில், ஊரக வளர்ச்சி முகமை சார்பில், 'திருப்பூர் நல் திருப்பம்' திட்டம் முடுக்கிவிடப்பட்டது.
துாய்மைக் காவலர்கள் வீடு வீடாக சென்று குப்பைகளை சேகரிப்பது, மக்கும் குப்பைகளை தனியாகப் பிரித்து உரமாக்குவது, மக்காத குப்பைகளை மறுசுழற்சிக்கு அனுப்புவது என திட்டமிடப்பட்டு செயல்பட துவங்கியது.
இதனால், பொதுமக்கள் மத்தியில் நல்ல மாற்றம் தென்பட துவங்கியுள்ளது. பெரும்பாலான கிராமப்புற மக்கள், தங்களது வீடுகளிலேயே நான்கு வகையான குப்பைத் தொட்டிகளை வாங்கி வைத்து, மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை முறையாக தரம் பிரித்து வழங்கத் துவங்கியுள்ளனர்.
பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்தாலும், களத்தில் துாய்மைப் பணிகளை மேற்கொள்ளும் கட்டமைப்பில் தொய்வு தென்படுகிறது.
துாய்மைக் காவலர்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச சம்பளம் காரணமாக, இப்பணிக்கு வர பலர் ஆர்வம் காட்டுவதில்லை. ஊராட்சிப் பகுதிகளில் தேவைக்கேற்ப துாய்மைப் பணியாளர்கள் இல்லை.
ஒரு சில ஊராட்சிகளில் மட்டுமே தினசரி குப்பை சேகரிக்கப்படுகிறது. பெரும்பாலான இடங்களில், 3 முதல் 4 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே பணியாளர்கள் வருகின்றனர்.
தரம் பிரித்து வைக்கப்பட்ட குப்பைகளும் வீடுகளிலேயே தேங்கி வீணாகின்றன. இதனால், குடியிருப்புவாசிகள், குப்பைகளை மொத்தமாக, சாலையோரம் கால்வாயில் வீசியெறிய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
மாற்றம் வருமா? பொதுமக்கள் தங்கள் கடமையை உணர்ந்து குப்பைகளை தரம் பிரித்துத் தரும் நிலையில், அதை சேகரிக்க ஆட்களோ, சரியான திட்டமிடலோ இல்லாதது திட்டத்தின் அடிநாதத்தையே அசைத்துப் பார்க்கிறது.
துாய்மைக் காவலர்களின் ஊதியத்தை உயர்த்தி வழங்குவதோடு, காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்பினால் மட்டுமே, 'திருப்பூர் நல் திருப்பம்' திட்டம் எதிர்பார்த்த பலன் தரும், என்பது ஊராட்சி நிர்வாகங்களின் கணிப்பு.
'துாய்மைப் பணியில் எந்தளவு ஆர்வம்காட்ட துவங்கியிருக்கிறோமோ, அந்தளவு துாய்மைப் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்கான முயற்சியையும் எடுத்து வருகிறோம்,' என்கின்றனர், ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள்.