Sport
மீண்டும் காயத்தால் பாதிப்பு.. ஆப்கன், ஆசிய போட்டிகளிலிருந்து விலகிய ஹர்ஷித் ராணா..

ஜஸ்பிரித் பும்ரா, வாஷிங்டன் சுந்தர் மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோரும் நிபந்தனையின் அடிப்படையிலேயே தேர்வாகியிருந்தனர்.
இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா (Harshit Rana), காயம் காரணமாக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர் மற்றும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலிருந்து (Asian Games 2026) விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக மற்றொரு இளம் வேகப்பந்து வீச்சாளரான யாஷ் தாக்கூர் (Yash Thakur) இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது தொடைப் பகுதித் தசையில் (Hamstring injury) காயமடைந்த ஹர்ஷித் ராணா, அதிலிருந்து மீண்டு வந்து கொண்டிருந்தார். நேற்று முன்தினம் நடைபெற்ற மாதிரிப் போட்டிப் பயிற்சியின் போது (Match Simulation) அவருக்கு மீண்டும் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் உடற்தகுதி பெறத் தவறியதை இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) உறுதி செய்துள்ளது.
முன்னதாக, தகுதிச் சான்றிதழ் பெறப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஹர்ஷித் ராணா அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். ஜஸ்பிரித் பும்ரா, வாஷிங்டன் சுந்தர் மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோரும் இதே நிபந்தனையின் அடிப்படையிலேயே தேர்வாகியிருந்தனர்.
ஹர்ஷித் ராணா விலகியதைத் தொடர்ந்து, 27 வயதான யாஷ் தாக்கூர் ஆப்கானிஸ்தான் டி20 தொடர் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஆகிய இரண்டிற்குமான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற ஜிம்பாப்வே தொடரில் டி20 போட்டிகளில் அறிமுகமான யாஷ் தாக்கூர், 2 போட்டிகளில் விளையாடி 4 விக்கெட்டுகளைக் வீழ்த்தி அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), அபிஷேக் சர்மா, வைபவ் சூரியவன்ஷி, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், திலக் வர்மா, சிவம் தூபே, நிதிஷ் குமார் ரெட்டி, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், யாஷ் தாக்கூர்.
