Economy, business and finance
ஆகஸ்டு மாத ஏற்றுமதி 26 சதவீதம் அதிகரிப்பு

புதுடில்லி: கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் சரக்கு ஏற்றுமதி 26.12 சதவீதம் அதிகரித்து 4.16 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதுவே ஆகஸ்ட் மாத வரலாற்றில் பதிவான அதிகபட்ச ஏற்றுமதி மதிப்பு என மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் இறக்குமதி 14.10 சதவீதம் அதிகரித்துள்ள போதிலும், ஒட்டுமொத்த வர்த்தக பற்றாக்குறை சற்றே குறைந்துள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மற்றும் 'பிரிக்ஸ்' நாடுகளில் இந்திய பொருட்களுக்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ளதே இதற்கு முக்கிய காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் தங்கம் இறக்குமதி 58 சதவீதம் சரிந்து 21,850 கோடி ரூபாயாக குறைந்துள்ளது; கடந்த ஆண்டு ஆகஸ்டில் இது 51,300 கோடி ரூபாயாக இருந்தது
நடப்பு நிதியாண்டின் முதல் 5 மாதங்களில் (ஏப்ரல் -- ஆகஸ்ட்) சீனாவில் இருந்து இறக்குமதி 6.22 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிப்பு; கடந்த நிதியாண்டில் 4.89 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
தொடரும் வளர்ச்சி இந்தியாவின் ஏற்றுமதி தொடர்ந்து வலுவான வளர்ச்சி பாதையில் பயணித்து வருகிறது. நடப்பு நிதியாண்டின் முதல் 5 மாதங்களில் ஏற்றுமதி 17.85 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. பொறியியல், பெட்ரோலியம், ரசாயனம் மற்றும் ஜவுளி ஆகிய துறைகளின் சிறப்பான செயல்பாடே இந்த ஏற்றுமதி அதிகரிப்புக்கு முக்கிய காரணம். பாரம்பரிய சந்தைகளை கடந்து, பல புதிய சந்தைகளிலும் இந்தியாவின் வர்த்தகம் விரிவடைந்து வருகிறது. - ராஜேஷ் அகர்வால், செயலர், மத்திய வர்த்தக துறை