Weather
பருவ மழை முன்னெச்சரிக்கை பணி: இம்மாத இறுதிக்குள் முடிக்க கெடு

சென்னை:'வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை, பல்வேறு துறையினரும் ஒருங்கிணைந்து, இம்மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும்' என, தலைமை செயலர் சாய்குமார் உத்தரவிட்டார்.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக, தென்சென்னைக்கு உட்பட்ட அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லுார் மண்டலங்களில் உள்ள நீர்வழித்தடங்களை, தலைமை செயலர் சாய்குமார் ஆய்வு செய்தார்.
ஐ.ஐ.டி.,யில் இருந்து வெளியேறும் மழைநீர் பகிங்ஹாம் கால்வாயில் சேரும் வகையில், ஓ.எம்.ஆர்., டைடல் பார்க் சந்திப்பில் கட்டப்பட்டு வரும் இரண்டு நீர்வழிப்பாதைகள், பள்ளிக்கரணை மற்றும் மயிலை பாலாஜி நகர் கால்வாய் பணிகளை ஆய்வு செய்தார்.
பணிகள் நிறைவடைந்தால் மடிப்பாக்கம், ராம்நகர், குபேரன் நகர், சதாசிவம் நகர் பகுதிகளில் வெள்ள பாதிப்பு தடுக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாராயணபுரம் ஏரியில் நடைபெறும் ஆகாயத்தாமரை அகற்றும் பணியை பார்வையிட்ட சாய்குமார், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
ரேடியல் சாலையில், முக்கிய நீர்வழித்தடமாக உள்ள, 17 கல்வெட்டுகளில் வெள்ளம் தடையின்றி செல்லும் வகையில், அங்கு தேங்கியுள்ள குப்பை, கழிவுகளை அகற்ற உத்தரவிட்டார்.
சதுப்பு நிலத்தில் இருந்து பகிங்ஹாம் கால்வாய் வரை கட்டப்படும் கால்வாய் மற்றும் ஒக்கியம் மடுவில் நடைபெறும் மெட்ரோ ரயில் திட்டப் பணிகளையும் ஆய்வு செய்தார். பருவமழையின்போது வெள்ள பாதிப்பு ஏற்படாத வகையில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை பணிகளை, மாநகராட்சி, குடிநீர் வாரியம், நெடுஞ்சாலைத்துறை, மெட்ரோ ரயில் உள்ளிட்ட சேவைத்துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, இம்மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும் எனவும், சாய்குமார் உத்தரவிட்டார். ஆய்வின்போது, பல்வேறு துறைகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
