Politics
டெல்லி முதல் உலக அரசியல் வரை... ‘பிரிக்ஸ்’ போடும் புதிய கணக்கு!

மேற்காசியப் போர், எண்ணெய் விலை உயர்வு, டாலரின் ஆதிக்கம் உட்பட பல நெருக்கடிகளில் உலகம் சிக்கியிருக்கிறது. சவால்கள் மிகுந்த இந்தச் சூழலில், சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்ற டெல்லி ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாடு உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
உலகின் எதிர்காலப் பொருளாதார சக்திகள் குறித்து பிரிட்டனின் பொருளாதார நிபுணர் ஜிம் ஓ நீல், 2001-ம் ஆண்டு எழுதிய ஆய்வுக் கட்டுரையில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நான்கு நாடுகளின் முதலெழுத்துகளை இணைத்து ‘BRIC’ என்ற சொல்லை உருவாக்கினார். இந்த நான்கு நாடுகளும், 2050-ம் ஆண்டுக்குள் உலகின் மிகப்பெரிய பொருளாதார சக்திகளாக உருவெடுக்கக்கூடும் என்பது அவரது கணிப்பாக இருந்தது. ஆனால், அவர் உருவாக்கிய ‘பிரிக்ஸ்’ என்ற சொல் அரசியல் வடிவம் பெறுவதற்கு நீண்டகாலம் ஆகவில்லை.
2006-ல் BRIC நாடுகளுக்கு இடையே முறையான ஒத்துழைப்பு தொடங்கியது. அதில், 2010-ம் ஆண்டு தென்னாப்பிரிக்கா இணைந்ததால், `பிரிக்’ என்பது `பிரிக்ஸ்’ ஆனது.
அதன் பிறகு, பொருளாதாரத்தைத் தாண்டி அரசியல், வர்த்தகம், நிதி, சுகாதாரம், காலநிலை மாற்றம், தொழில்நுட்பம் உட்பட பல்வேறு துறைகளிலும் இந்த அமைப்பு தனது தடத்தைப் பதிக்கத் தொடங்கியது. தற்போது பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, இந்தோனேசியா என 11 நாடுகள் பிரிக்ஸில் இடம்பெற்றிருக்கின்றன. அத்துடன் பெலாரஸ், பொலிவியா, கியூபா, கஜகஸ்தான், மலேசியா உள்ளிட்ட பத்து நாடுகள் ‘Partner Country’ என்ற அந்தஸ்துடன் பிரிக்ஸில் இணைந்திருக்கின்றன.
உலக மக்கள்தொகையில் சுமார் பாதியையும், உலக ஜி.டி.பி-யில் 40 சதவிகிதத்தையும், உலக வர்த்தகத்தில் 26 சதவிகிதத்தையும் பிரிக்ஸ் நாடுகள் கொண்டிருக்கின்றன. இத்தகைய வலுவான பொருளாதாரக் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்த ஆண்டு ஏற்ற இந்தியா, 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டை செப்டம்பர் 12, 13 தேதிகளில் டெல்லியில் நடத்தியது. ‘நெகிழ்திறன், புதுமை, ஒத்துழைப்பு, நிலைத்தன்மைக்கான கட்டமைப்பு’ என்ற மையக்கருத்தில் நடைபெற்ற மாநாட்டின் நிறைவில், பிரிக்ஸ் தலைவர்கள் ‘புதுடெல்லி பிரகடனம் 2026’-ஐ ஏற்றுக்கொண்டனர். மாநாட்டில் விவாதிக்கப்பட்ட முக்கியமான சர்வதேச, பொருளாதார விவகாரங்களில் பிரிக்ஸ் நாடுகளின் பொதுவான நிலைப்பாடுகளையும், அடுத்தகட்ட ஒத்துழைப்புக்கான வழிகாட்டுதல்களையும் உள்ளடக்கிய கூட்டுப் பிரகடனம்தான் இது.
மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றம் தொடர்பாக ஆழ்ந்த கவலை தெரிவித்த கூட்டறிக்கை, “நிலைமையை மேலும் மோசமாக்கக்கூடிய நடவடிக்கைகளைத் தவிர்த்்து, அதிகபட்ச கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும்” என்று கோரியது. உலக வர்த்தக அமைப்புக்கு முரணானதாகக் கருதப்படும் ஒருதலைப்பட்சமான வரி, வரி அல்லாத நடவடிக்கைகள் குறித்து பிரிக்ஸ் மிகுந்த கவலையைத் தெரிவித்தது. எல்லை தாண்டிய பணப் பரிவர்த்தனைகளில் ஒத்துழைப்பை ஆழப்படுத்தவும், வர்த்தகம், முதலீட்டில் உள்நாட்டு நாணயங்களின் பயன்பாட்டை விரிவுபடுத்தவும் பிரிக்ஸ் நாடுகள் ஒப்புக்கொண்டன.
பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின் இடையிலான சந்திப்பு, எரிசக்தி, பாதுகாப்புத்துறைகளில் ரஷ்யாவுடன் இந்தியாவுக்கு இருக்கும் நெருக்கத்தைக் காண்பிப்பதாக இருந்தது. 2019-ம் ஆண்டு மாமல்லபுரத்தில் இந்தியப் பிரதமரும் சீன அதிபரும் சந்தித்த பிறகு, கல்வான் மோதலைத் தொடர்ந்து இந்தியா–சீனா உறவில் பதற்றம் ஏற்பட்டது. அதன் பிறகு, ஜி ஜின்பிங் இந்தியாவுக்கு இப்போதுதான் வந்திருக்கிறார். இந்தச் சந்திப்பின்போது, எல்லைப் பகுதியில் அமைதியும் நிலைத்தன்மையும் நீடிப்பதுதான், இரு தரப்பின் சுமுக உறவுக்கு இன்றியமையாதது என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
டெல்லி பிரிக்ஸ் மாநாடு முடிந்தாலும், அதன் அரசியல் பயணம் முடியவில்லை. உள்ளூர் நாணயப் பரிவர்த்தனை முதல் செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் தொழில்நுட்பம், சுகாதாரம், காலநிலை மாற்றம், உணவு, எரிசக்திப் பாதுகாப்பு, ஐ.நா சீர்திருத்தம் எனப் பல தளங்களில் பிரிக்ஸ் தனது தடத்தை விரிவுபடுத்த முடிவெடுத்திருக்கிறது. அதற்கான நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டிருக்கின்றன.
சைவ விருந்து சர்ச்சை!
பிரிக்ஸ் மாநாட்டில், உலகத் தலைவர்களுக்கும், பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் வழங்கப்பட்ட அரசு விருந்தில், வெறும் சைவ உணவுகள் குறிப்பாக, தென்னிந்திய உணவு வகைகளே பரிமாறப்பட்டன என்பது சர்ச்சையாகியிருக்கிறது. இந்திய உணவின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்துவதற்கு மாறாக, ஒரே வகையான உணவுப் பண்பாட்டை முன்னிறுத்தியது சரியல்ல என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. அதேபோல், வெளிநாட்டுத் தலைவர்கள் பயணித்த டெல்லியின் முக்கியச் சாலைகளில் குடிசைப் பகுதிகளை மறைப்பதற்காக, வெள்ளைத் திரைகளைக் கொண்டு மூடிய நடவடிக்கையும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.
