Lifestyle and human interest
வெள்ளியணை அருகே விவசாயி கொலை வழக்கில் 7 பேர் கைது
கரூர்:வெள்ளியணை அருகே நடந்த, விவசாயி கொலை வழக்கில், ஏழு பேரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை செல்லப்பட்ட நாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் பொம்மன், 44, விவசாயி. விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் பகவதி அம்மன் கோவில் திருவிழா வசூல் தொடர்பாக, பொம்மனுக்கும் அதே பகுதியை சேர்ந்த, சிலருக்கும் முன்விரோதம் உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை பொம்மன், கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே, கருவாடநாயக்கனுார் பகுதியில் வசித்து வரும், மூன்றாவது மனைவியை பார்க்க டூவீலரில், காணியாளம்பட்டி பகுதியில் சென்றுள்ளார். அப்போது, மறைந்திருந்த மர்ம கும்பல் பொம்மனை சராமரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பியது.வெள்ளியணை போலீசார், பொம்மன் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அப்போது, முன் விரோதம் காரணமாக, ஏழு பேர் சேர்ந்து அவரை வெட்டி கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, பொம்மன் கொலை வழக்கு தொடர்பாக திண்டுக்கல் மாவட்டம், செல்லப்பட்ட நாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த குமரவேல், 25, துரைமுருகன், 19, செல்வகுமார், 30, பொம்ம நாயக்கர், 21, கார்த்திக், 20, மற்றும், 17, 18 வயது சிறுவர்கள் என, ஏழு பேரை வெள்ளியணை போலீசார் நேற்று கைது செய்தனர்.