Religion
மஞ்சள் அரைத்து வழிபட்டால் மனமிறங்கும் அம்மன்..! ராமேஸ்வரத்தை காக்கும் நம்பு நாயகி அம்மன் கோவில் சிறப்புகள்....

ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி செல்லும் வழியில் உள்ள நம்பு நாயகி அம்மன் கோவிலில் பக்தர்கள் விரலி மஞ்சள் அரைத்து வேண்டும் வினோத வழிபாட்டு முறை வழக்கத்தில் உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி செல்லும் வழியில் புதுரோடு என்னும் பகுதியில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் வனப்பகுதிக்குள் நம்பு நாயகி அம்மன் கோவிலானது அமைந்துள்ளது.
இக்கோவிலானது ராமேஸ்வரத்தில் வாழும் பலருக்கு குலதெய்வமாகவும், ராமேஸ்வரத்தில் காக்கும் காவல் பெண் தெய்வங்களில் தெற்கில் அமைந்துள்ள காவல் தெய்வமாகவும் போற்றப்பட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலாகவும் உள்ளது.
இக்கோவிலில் திருமணம் வரம், குழந்தை வரம், நோய் நொடியில் நிரந்தரத் தீர்வுக்கென விரலி மஞ்சள் அரைத்து அம்மனுக்குப் படைத்து வேண்டிக்கொண்டால் நிறைவேறும் என்பது ஐதீகமாக காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. இதனால் கோவிலுக்கு முன்பு பாரம்பரிய முறைப்படி அம்மி வைத்து மஞ்சள் அரைத்து வேண்டுதல் நிறைவேறுவதற்கு பெண்கள் வழிபாடு செய்கின்றனர்.
இக்கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். குறிப்பாக தற்போது தருமபுரியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ள சௌமியா அன்புமணி இக்கோவிலை பற்றி தனியார் தொலைக்காட்சியில் பேட்டி ஒன்றில் கூறியிருப்பார். அதுபோல் அடிக்கடி குடும்பத்துடன் இங்கு வந்து மஞ்சள் அரைத்து வழிபாடு செய்வார்கள்.
இக்கோவிலில் தல வரலாறு என்னவென்றால் 14-ம் நூற்றாண்டு காலத்தில் தாழம்பூ வனத்தில் அதாவது தாழை மரங்கள் நிறைந்து காணப்பட்ட வனத்தில் தாழை மரத்தினை வெட்டும்போது அதில் இருந்து இரத்தம் வந்துள்ளது. அதனை வெட்டியவர் பயந்து ஊருக்குள் சென்று மக்களிடம் தெரிவித்து அனைவரும் அங்கு ஒன்று கூடி பார்த்தபோது, ஒருவருக்கு சுவாமி ஆடி இம்மரத்தடியில் தாழை அம்மனாக நான் மறைந்துள்ளேன். என்னை தோண்டி எடுத்து கோவில் கட்டி வழிபட்டால் காத்தருளுவேன் எனக் கூறியுள்ளார்.
தட்சன துருவன் மற்றும் பட்சன துருவன் என்ற இருவர் முனிவர்கள், அந்த நிலத்தை தோண்டி அங்கிருந்து சிலையினை எடுத்து வைத்து குடிசை அமைத்து வழிபடத்தொடங்கினர். காலப்போக்கில் சேதுபதி மன்னர் ராமநாதசுவாமி கோவிலின் உப கோவில்களில் ஒன்றாக வழிபடத் தொடங்கினர். முதலில் நம்பு நாயகி அம்மன் "தாழை அம்மன், தாழை ஈஸ்வரி" அம்மன் என பெயர் இருந்துள்ளது. காலப்போக்கில் இந்த அம்மனை நம்பியதால் குறைகள் தீர்வு கண்ட மக்கள் அம்மனை நம்பு, நம்பு என்று கூறி காலப்போக்கில் "நம்பு நாயகி" என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 130 ஆண்டுகளுக்கு முன்பே மால் கலாச்சாரம்..! சென்னை ஸ்பென்சர்ஸின் பிரம்மாண்ட வரலாறு..!
இதன் பின் எந்தவொரு குறையுமின்றி வாழ்ந்ததாகவும். அந்த அம்மனுடைய பெயர் சேர்த்து தங்களுடைய வாரிசுகள் ஆண், பெண் யாராக இருந்தாலும் அவர்களுக்கு வைக்கும் பெயரில் நம்பு என்ற பெயரை வைத்து பரம்பரை பரம்பரையாக வழிபட்டு வந்துள்ளனர். தற்போது இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் ராமநாதசுவாமி கோவிலின் உப கோவிலாக உள்ளது. இக்கோவிலைச் சுற்றியுள்ள ஆலமரங்களில் முனீஸ்வரர், காளியம்மன் போன்ற பல தெய்வங்களின் சிலைகளும் வைத்து வழிபட்டு வருகின்றனர்.
தினமும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து பலரும் மஞ்சள் அரைத்து, பொங்கல் வைத்து, குழந்தை தொட்டில் அமைத்து நம்புநாயகி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து தரிசனம் செய்து வருகின்றனர்.
