Politics
ஸ்டாலின் மிசா கைதியா... இல்லையா?
தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு முதல்வர் விஜய் அளித்த பதிலுரையில் தி.மு.க-வைக் கடுமையாக விமர்சித்தார். | controversy about stalin misa case

மீண்டும் வெடிக்கும் 50 ஆண்டு சர்ச்சை!
அரை நூற்றாண்டுக்கு முந்தைய ‘மிசா’ கொடுமைகளைத் தமிழக அரசியலில் இன்றைக்கு விவாதப்பொருளாக மாற்றியிருக்கிறார் முதல்வர் விஜய். மிசா சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின், கடுமையான சிறைக் கொடுமைகளுக்கு ஆளானதைக் கேலி செய்யும் வகையில், முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் செய்த சைகை பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. அதன் பிறகு, ‘மு.க.ஸ்டாலின் மிசாவில் கைதுசெய்யப்படவில்லை’ என்று சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் சட்டமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் பேசியிருப்பது சர்ச்சையைத் தீவிரப்படுத்தியிருக்கிறது.
``இஸ்மாயில் அறிக்கையைப் படித்துவிட்டுப் பேச வேண்டும்!’’
தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு முதல்வர் விஜய் அளித்த பதிலுரையில் தி.மு.க-வைக் கடுமையாக விமர்சித்தார். அதிலும் மிசா, சர்க்காரியா கமிஷன் ஆகிய விவகாரங்களைத் தொட்டு ஆவேசமாகப் பேசினார். அப்போது, மிசாவில் கைதுசெய்யப்பட்டு, கடுமையான சிறைக் கொடுமைகளுக்கு ஸ்டாலின் ஆளானதைக் கேலி செய்யும்விதமாக, தாடையில் கைவைத்து விஜய் பேசினார்.
அவ்வாறு அவர் பேசியதையும், அப்போது அவர் வெளிப்படுத்திய உடல்மொழியையும் ‘கண்டிக்கத்தக்கது’ என்று த.வெ.க அரசுக்கு ஆதரவு அளித்துவரும் இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்களே கண்டித்தனர். அதன் பிறகு, ‘அந்தச் சைகை யதேச்சையானது. அதில் எந்த உள்நோக்கமும் இல்லை’ என்று விளக்கமளித்தார் விஜய். ஆனாலும், மிசாவில் ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை என்றே அமைச்சர் நிர்மல் குமார் தொடர்ந்து பேசிவருகிறார்.
குறிப்பாக, “ஸ்டாலின் மிசா சட்டத்தின்கீழ்தான் கைதுசெய்யப்பட்டார் என்பதற்கான குறிப்புகள் எதுவும் இல்லை. மிசா காலத்தில் திருட்டு, வழிப்பறி, பெண்கள் தொடர்பான வழக்குகள் உட்பட பல்வேறு காரணங்களுக்காகவும் கைது செய்யப்பட்டவர்கள் இருந்தனர். அவர்கள் அனைவரையும் மிசா கைதிகள் என்று கூற முடியாது” என்று நிர்மல் குமார் பேசியதற்குக் கடும் எதிர்ப்பு எழுந்தது. நிர்மல் குமாரின் பேச்சை விமர்சித்த சி.பி.எம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், “மிசா கால சிறைக் கொடுமைகள் குறித்து இஸ்மாயில் கமிஷன் அறிக்கையைப் படித்துவிட்டு பேச வேண்டும்” என்றார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த மு.இஸ்மாயில் தலைமையிலான குழுவின் அறிக்கை பொதுவெளியில் இருக்கிறது. மிசா காலத்தில், சிறையில் நடைபெற்ற தவறுகளும், கைதிகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளும் விரிவாக இடம்பெற்றிருக்கின்றன.
``மிசாவில் கைதான 419 தி.மு.க-வினர்!’’
இந்த விவகாரம் குறித்து ஐ.நா முன்னாள் அதிகாரியும், எழுத்தாளருமான இரா.கண்ணனிடம் பேசினோம். “நீதிபதி இஸ்மாயில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தவர். அவர் தலைமையிலான குழு, ஒரு மாதம் விசாரணை நடத்தி அறிக்கை அளித்தது. அந்த அறிக்கையில் மிசா காலத்தில், சிறையில் என்னென்ன தவறுகள் நடந்தன, கைதிகள் எவ்வாறு கொடுமைப்படுத்தப்பட்டார்கள் என்பதெல்லாம் விரிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதேபோல, எமர்ஜென்சி கால அத்துமீறல்களையும், அதிகார துஷ்பிரயோகங்களையும் விசாரிப்பதற்காக உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஜே.சி.ஷா தலைமையில் மொரார்ஜி தேசாய் அரசு அமைத்த கமிஷனும் விரிவான அறிக்கையை அளித்திருக்கிறது.
அதில், `மிசா சட்டத்தின்கீழ் தமிழகத்தில் 1,027 பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களில், 419 பேர் தி.மு.க-வினர்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், அந்தக் கைதிகளின் பெயர்களை ஷா கமிஷன் பட்டியலிடவில்லை. அதை வைத்துக்கொண்டு, ‘ஷா கமிஷன் அறிக்கையில் மு.க.ஸ்டாலின் பெயர் அதில் இல்லை என்று கூறுவது சரியான வாதம் இல்லை. இந்திய பாதுகாப்புச் சட்ட விதிகள் (Defence of India Rules), உள்நாட்டுப் பாதுகாப்பு பராமரிப்புச் சட்டம் (Maintenance of Internal Security Act) ஆகிய இரண்டு சட்டங்களில்தான் மிசா கால கைதுகள் நடைபெற்றன. மு.க.ஸ்டாலினும் மிசாவில்தான் கைது செய்யப்பட்டார் என்பதில் சந்தேகமே இல்லை” என்கிறார் இரா.கண்ணன்.
``கருணாநிதியைப் பழிவாங்க ஸ்டாலின் கைது!’’
இது குறித்து தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளரான தியாகுவிடம் பேசினோம். “1976-ம் ஆண்டு, ஜனவரி 31-ம் தேதி இரவு கருணாநிதி தலைமையிலான தி.மு.க அரசு கலைக்கப்பட்டது. அதன் பிறகு, தமிழ்நாடு முழுவதும் மிசா சட்டத்தின்கீழ் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பிப்ரவரி 1-ம் தேதி இரவுக்குள் தமிழ்நாட்டிலுள்ள பல சிறைகளும் மிசா கைதிகளால் நிரம்பிவிட்டன. கருணாநிதியைப் பழிவாங்குவதற்காக அவருடைய மகன் ஸ்டாலினைக் கைதுசெய்து சிறையில் சித்ரவதை செய்தார்கள். மிசா சட்டத்தில்தான் அவர் கைதுசெய்யப்பட்டார்” என்கிறார் தியாகு.
இரண்டு ஆணையங்களின் அறிக்கைகள் ஆதாரங்களாகக் கண்முன் இருக்கும்போது, அரசியலுக்காக வரலாற்றைத் திரிப்பது தகுமா?
