Sport
முதல்வர் கோப்பை விளையாட்டு ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவர்கள்
கரூர்:முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் நேற்று தடகளம், கபடி போட்டி நடந்தன.கரூர் மாவட்டத்தில், முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி வரும், 27 வரை பல்வேறு பிரிவுகளில் நடக்கிறது.
இதில், 11,617 பள்ளி மாணவ, மாணவியர், 12,808 கல்லுாரி மாணவ, மாணவியர், 1,770 மாற்றுத்திறனாளிகள், 4,491 அரசு அலுவலர்கள், 19,345 பொதுமக்கள் என மொத்தம், 50,023 பேர் இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர். கரூர் மாவட்ட விளையாட்டு மைதானம், கரூர் தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லுாரி, புலியூர் செட்டிநாடு பொறியியல் கல்லுாரி, வெண்ணைமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பரணி பார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் கரூர் மாநகராட்சி நீச்சல் குளத்தில் போட்டிகள் நடக்கின்றன. நேற்று கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் தடகளம், ஹாக்கி மற்றும் பூப்பந்து ஆகிய போட்டிகளும், கையுந்து பந்து, கூடைப்பந்து போட்டி, எம்.குமாரசாமி பொறியியல் கல்லுாரி, கபடி போட்டி சேரன் உடற்கல்வியியல் கல்லுாரியில் நடந்தன. வெற்றி பெறுபவர்களுக்கு மொத்தம், 42.30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பரிசு தொகை வழங்கப்படவுள்ளது. மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெறுவோர், மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்பர்.